Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் ஆண்டுதோறும் இதய நோய் அதிகரிப்பு! கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் முயற்சி

நீலகிரியில் ஆண்டுதோறும் இதய நோய் அதிகரிப்பு! கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் முயற்சி

நீலகிரியில் ஆண்டுதோறும் இதய நோய் அதிகரிப்பு! கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் முயற்சி

நீலகிரியில் ஆண்டுதோறும் இதய நோய் அதிகரிப்பு! கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் முயற்சி

ADDED : செப் 29, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக, 520 பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளதால், அதனை கட்டுப்படுத்த சுகாதார துறையால் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரியில் குளிர் மற்றும் அடிக்கடி மாறும் காலநிலை மாற்றங்களால், பலருக்கு உடல் பாதிப்புகள் இருந்து வருவது வழக்கம். இதை தவிர, பலரிடையேயும் உள்ள போதை மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் நோயின் பாதிப்புகளை அதிகரிக்க செய்கிறது.

கடந்த காலங்களில் பெரும்பாலான மக்கள், விவசாயம் உட்பட பல்வேறு பணிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் செய்து வந்தனர். அதற்கு ஏற்றாற் போல் அவர்களின் உணவு பழக்கங்களும் இருந்தன. தானிய வகைகள் முக்கிய உணவு பட்டியலில் இருந்தது.

தற்போது, இவை அனைத்தும் மாறிவருகின்றன. விவசாய தோட்டங்கள் விற்பனை செய்யப்பட்டு 'கட்டட' காடுகளாக மாறி வருகின்றன. உடல் உழைப்பு குறைந்து, இளைய சமுதாயம், இரவு முழுவதும் கண்விழித்து, 'ஐடி' கம்பெனிகளில் பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு, துரித உணவுகளுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது.

இதனால், பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும், சிறு வயதில் பலரும் இதய நோயாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருவதாக, மருத்துவ துறையினர் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்.,29ல் உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரியில் நோயாளிகள் அதிகரிப்பு

இதயத்தின் முக்கியத்துவம் குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறியதாவது:

நம் மாநிலத்தில், ஆண்டுதோறும் இதய நோய் பாதிப்பால், 1.7 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உயர்ரத்த அழுத்தம், நீரழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகை பிடித்தல், போதைப்பழக்கம் போன்றவை முக்கிய காரணம்.

இது மலை மாவட்டமான நீலகிரியிலும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் குழுவினர் சார்பில் தினசரி நேரடியாக வீடுகளுக்கு சென்று, உடல் நலம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் தினசரி உடற்பயிற்சி செய்வது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறிப்பாக, பழங்குடியின மக்கள் மத்தியில் போதை மற்றும் புகையிலை பழக்கம் அதிகரித்தல், போதிய உணவு உட்கொள்ளாதது போன்ற காரணங்களால் அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த பழங்குடியின கிராமங்களில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொ) டாக்டர் சிபி கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், 520 பேர் ஆண்டுதோறும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில், 300 பேர் பழங்குடியினராகும். இதனை தவிர்க்க, போதிய உடற்பயிற்சி மற்றும் காய்கறி உணவுகளை அதிகப்படுத்துவது, உணவில் உப்பை குறைப்பது முக்கியம். இது குறித்து, சுகாதார துறை சார்பில் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us