Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் எதிரொலி

இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் எதிரொலி

இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் எதிரொலி

இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் எதிரொலி

ADDED : பிப் 12, 2024 12:38 AM


Google News
பெ.நா.பாளையம்;சின்னதடாகம் வட்டாரத்தில் இரவு நேரத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், வீரபாண்டி, காளையனூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் தடாகம், ராமநாதபுரம் அருகே திருமண மண்டபத்திற்கு பின்புறம் வசித்து வரும் சிவகாமி, 40, வீட்டின் வெளிப்பகுதியில், திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை, 4:00 மணிக்கு ஒற்றை காட்டு யானை, சிவகாமியின் இடது காலை தும்பிக்கையால் பிடித்து, இழுத்து, கீழே போட்டுவிட்டு சென்றுவிட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிவகாமி, சிகிச்சை பெற்று வருகிறார்.

யானைகளின் நடமாட்டத்தை, கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தடாகம் போலீசார் இரவு நேரத்தில் ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, கணுவாய், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போலீசார் எச்சரிக்கை உணர்வுடன், கவனமாக செல்லும்படி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோடை காலம் தொடங்கி விட்டதால், இரவு நேரங்களில் மலையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், திறந்த வெளியில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதிகாலை நேரங்களில், மலையோரங்களில் செல்லக்கூடாது. குடிபோதையுடன் மலையோர கிராமங்களில் நடமாடக்கூடாது. யானைகளின் நடமாட்டத்தை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அருகில் உள்ள தோட்டங்களில் வசிப்பவர்களுடன், எப்போதும் தகவல் தொடர்பில் இருக்க வேண்டும்.

யானை நடமாட்டம் இருப்பது தெரிந்தால், உடனடியாக வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும். பொதுமக்களாக யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.

யானைகளை கற்கள் உள்ளிட்ட பொருள்களால் தாக்க கூடாது. மீறினால் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us