மாநில எல்லையில் தொடரும் போக்குவரத்து பிரச்னை தீர்த்து வைக்குமா மாவட்ட நிர்வாகம்?
மாநில எல்லையில் தொடரும் போக்குவரத்து பிரச்னை தீர்த்து வைக்குமா மாவட்ட நிர்வாகம்?
UPDATED : மே 01, 2026 06:10 PM
ADDED : மே 01, 2026 06:00 PM
பந்தலுார்: தமிழக- கேரளா எல்லையான பாட்டவயல் பகுதிக்கு, கேரள மாநலம் சுல்தான் பத்தேரியில் இருந்து, 60 முறை கேரளா மாநில அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நாள்தோறும் இயக்கப்படுகிறது.
கேரளா எல்லையான நுால்புழா வரை, கேரளா அரசு பஸ்கள் இயக்க அனுமதி உள்ளது. இந்நிலையில், எல்லைப்பகுதி, இரு மாநில வனப்பகுதிகள் சந்திக்கும் பகுதியாக உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி, 1 கி.மீ., துாரம், தமிழக எல்லைக்குள் வந்து பாட்டவயல் சோதனை சாவடி எதிரே, பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இதே முறையில் தனியார் பஸ்களும் இயக்கப்படும் நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பஸ்களை பாட்டவயல் சோதனைச் சாவடிவரை இயக்க அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநில அரசு பஸ்களில், 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தனியார் பஸ்கள் கிராமப்புறங்கள் வழியாக இயக்கப்பட்டபோதும், 23 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு, பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தனியார் பஸ்களை மாநில எல்லை பகுதி வரை இயக்க வலியுறுத்தும் நிலையில், அங்கு வனப்பகுதி என்பதால், தமிழக, கேரளா வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி மறுத்துள்ளனர்.
பயணிகள் கூறுகையில்,'கடந்த பல நாட்களாக இப்பகுதியில் தனியார் பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டதால், இரு மாநில கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, மாநில எல்லையில் நிலவும் இந்த பிச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக போக்குவரத்து துறை கமிஷனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.
