Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

ADDED : பிப் 01, 2024 01:38 AM


Google News
சேலம்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் செல்வம், 53. இவரது மனைவி சின்னபொண்ணு, 44. நவம்பர் 23ல் செல்வம் பஸ்சில் சென்றபோது, ஒருவர் பேச்சு கொடுத்தார்.

அவர், 'ஆத்துார் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளேன். அரசிடம் இருந்து கடன் பெற்று தருகிறேன். 50,000 ரூபாய் கொடுத்தால் நான்கு லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும்' என கூறி மொபைல் எண் கொடுத்துள்ளார்.

இதையடுத்து செல்வம், அந்த நபரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறியபடி நவம்பர் 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு, வாழப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே செல்வம் சென்றார்.

அங்கு வந்த அவரிடம் 45,000 ரூபாய் கொடுத்தார்.

'கடனுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்க வேண்டும். உன் மனைவிக்கு நகை போட்டு, டிசம்பர் 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்' என கூறிவிட்டு சென்றார்.

அதன்படி செல்வம், சின்னபொண்ணுவுடன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சைக்கு நுழைவுச்சீட்டை எடுத்து தயாராக இருந்த அந்த நபர், அதை செல்வத்திடம் கொடுத்து, நகல் எடுத்து வருமாறு கூறி அனுப்பிவிட்டார்.

பின், சின்னபொண்ணுவிடம், மருத்துவ சோதனையின்போது, 'நகை அணிந்தால் டாக்டர்கள் திட்டுவர்' என கூற, நகையை கழற்றி அவரது பையில் வைத்தார். அந்த பையை வாங்கிக் கொண்ட அவர், ஆவணங்களை வாங்கி வருவதாக கூறி விட்டுச் சென்றார். ஆனால், திரும்பி வரவே இல்லை.

இது குறித்து சின்னபொண்ணு கொடுத்த புகார்படி சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்ததில் மதுரை, ஆரப்பாளையம், உச்சபரமேட்டை சேர்ந்த முகமது மீரான், 62, நகையை அபகரித்தது தெரிந்தது.

கள்ளக்குறிச்சியில் இருந்த அவரை கைது செய்த தனிப்படை போலீசார், ஒன்பது சவரன் தங்கச் சங்கிலியை மீட்டனர்.

சென்னை, திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் அரசு அதிகாரி எனக்கூறி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் கடன் பெற்று தருவதாக மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us