ADDED : பிப் 05, 2024 11:50 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் முறையாக திட்டமிடாமல் கால்வாய் அமைக்கப்பட்டதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகள் முன்பு தேங்கியுள்ளது.
இப்பேரூராட்சியில் மேலூர் ரோட்டில் உள்ள செட்டியார்குளம் ஊருணியை ரூ 1.90 கோடி மதிப்பில் புனரமைத்து சுற்றிலும் நடைபாதை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அப்பணியின் ஒரு பகுதியாக நகரின் கழிவு நீர் ஊரணியில் கலக்காமல் இருக்க ஊரணி அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இக்கால்வாய் 18 வது வார்டு அம்பேத்கர் நகர் தெருவில் ஏற்கனவே இருந்த பழைய கால்வாயோடு இணைக்கப்பட்டது.
150 மீட்டர் தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் முறையானதிட்டமிடல் இல்லாமல் பள்ளமாக அமைக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதி முன்பாக கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் கால்வாய்க்குள் தேங்கிகிடக்கிறது.
தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள்பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இப்பகுதியில் தினசரி காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று அதிகம் ஏற்படுகிறது. எனவே புதிதாக அமைக்கப்பட்ட கால்வாயை மறு ஆய்வு செய்து அதில் கழிவுநீர் தேங்காதவாறு முறைப்படுத்தபேரூராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


