Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கூடுதல் வேலை; சம்பளம் இழுபறி;, மருத்துவ பணியாளர்கள் குமுறல்

கூடுதல் வேலை; சம்பளம் இழுபறி;, மருத்துவ பணியாளர்கள் குமுறல்

கூடுதல் வேலை; சம்பளம் இழுபறி;, மருத்துவ பணியாளர்கள் குமுறல்

கூடுதல் வேலை; சம்பளம் இழுபறி;, மருத்துவ பணியாளர்கள் குமுறல்

ADDED : ஜூன் 20, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வழங்குவதோடு சம்பளம் வழங்குவதிலும் இழுபறி நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.

தொற்றா நோய்களான, ரத்த அழுத்தம், நீரழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கு நேரடியாக சென்று தேவையான சிகிச்சை, மருந்து வழங்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள துணை சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணி நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் 34 பேர் இந்த பணியை செய்து வருகின்றனர்.

சங்கராபுரம் ஊராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.3 பேர் பணியாற்றிய வேண்டிய இவ்வூராட்சியில் ஒருவர் மட்டுமே பணியாற்றி வந்தார். அந்தப் பணியிடமும் தற்போது காலியாக உள்ளது. இப்பகுதியில், மக்களை தேடி மருத்துவ திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, மருத்துவ முகாம், தொழு நோயாளிகள் கண்டறிதல், புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.நிர்ணயித்த பணியை விட கூடுதல் பணி சுமையால் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

சம்பளம் கிடைப்பதில் இழுபறி


மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு மாதந்தோறும், ஊக்கத் தொகையுடன் மாதம் ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது.இதில், வாகன எரிபொருள் செலவு, பயணச் செலவும் அடங்கும்.

போதிய சம்பளம் இல்லாவிட்டாலும்,குடும்ப சூழ்நிலை காரணமாக இப்பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, களப்பணிக்கு செல்லும் முன் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று கையெழுத்து போட்ட பின்பு பணி மேற்கொள்ளவும் தெரிவிப்பதால் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். சம்பளம் கிடைப்பதிலும், மாதந்தோறும் இழுபறி நீடிப்பதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதல் பணிக்கு ஏற்ப கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டார மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்:

மருத்துவத் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அனைவருமே கூடுதல் பணி மேற்கொண்டு வருகின்றனர். மகளிர் குழுவினரே திட்டத்தில் பணி செய்கின்றனர்.

பணியாளர்களின் சம்பள பட்டியல் மகளிர் திட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் மூலமே சம்பளம் வழங்கப்படுகிறது.

சங்கராபுரம் பணியிடம் தற்போது காலியாக உள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us