ADDED : செப் 19, 2025 02:09 AM
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த ஒன்பது நிரந்தர உண்டியல்களும், ஆடி மாதத்திற்காக ஐந்து தற்காலிக உண்டியல்களும், ஒரு கோசாலை உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது. 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம் வெள்ளி, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எண்ணப்படும்.
நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம், தங்க நகை, வெள்ளி ஆபரணம் ஆகியவற்றை எண்ணும் பணி சிவகங்கை துணை ஆணையர் சங்கர் தலைமையில் உதவி ஆணையர்கள் ஞானசேகரன், கணபதி முருகன் மேற்பார்வையில் நடந்தது.
உண்டியலில் 54 லட்சத்து, 6 ஆயிரத்து எட்டு ரூபாய் ரொக்கமும், 75 கிராம் தங்கம், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிசிடிவி கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.