Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை பயிற்சி டாக்டர்கள் போராட்டம் வாபஸ் டீனிடம் நிபந்தனை வைப்பு

சிவகங்கை பயிற்சி டாக்டர்கள் போராட்டம் வாபஸ் டீனிடம் நிபந்தனை வைப்பு

சிவகங்கை பயிற்சி டாக்டர்கள் போராட்டம் வாபஸ் டீனிடம் நிபந்தனை வைப்பு

சிவகங்கை பயிற்சி டாக்டர்கள் போராட்டம் வாபஸ் டீனிடம் நிபந்தனை வைப்பு

ADDED : அக் 10, 2025 12:00 AM


Google News
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை தாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்வது, அவசர கால விபத்து சிகிச்சை பிரிவில் சிசி டிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் சீனிவாசன் உறுதியளித்ததையடுத்து பயிற்சி டாக்டர்கள் நேற்று மதியம் முதல் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அவசர கால சிகிச்சை பிரிவில் செப்., 28 அதிகாலை 12:00 மணிக்கு நேரு பஜார் பாலமுருகன் டூவீலர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு பயிற்சி டாக்டர்கள் கருணா 23, சாதிக் 23, விஷ்ணு தினேஷ் 23 சிகிச்சை அளித்தனர்.

பாலமுருகன் உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இதனை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் அக்., 6 பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்று டாக்டர்களை தாக்கியதாக சூர்யா 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை இரு நாட்களுக்குள் கைது செய்வதாகவும் போலீசார் உறுதி அளித்தனர். இதனால் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இரு நாட்களாகியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததால் நேற்று முன்தினம் முதல் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டனர். மருத்துவ பயனாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களுடன் டீன் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அவசரகால விபத்து சிகிச்சை பிரிவில் துல்லிய பேசும் திறன் கேட்கும் சிசி டிவி கேமரா மற்றும் 50 இன்ச் டிவி பொருத்தி கண்காணிக்க வேண்டும். கூடுதல் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய நபரான மருதுபாண்டியனை விரைந்து கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பயிற்சி டாக்டர்கள் வைத்தனர்.

இவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக டீன் உறுதி அளித்தார். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் நேற்று மதியம் முதல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

பயிற்சி டாக்டர்களை தாக்கியதாக இதுவரை சூர்யா 25, சுப்பிரமணியன் 27, சுப்பிரமணியன் (எ) சுப்புடு 40 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மருதுபாண்டியனை கைது செய்ய வேண்டும் எனவும் பயிற்சி டாக்டர்கள் போலீசிடம் வலியுறுத்தினர்.

எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை : மருத்துவ சேவை நிறுவனம், டாக்டர், நர்ஸ்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்களிடம் தகராறு, மிரட்டல் விடுத்தல், பணி செய்யவிடாமல் தடுத்தல், மருத்துவமனைகளை சேதப்படுத்துவோரை பொது சொத்து சேதத்தடுப்பு சட்டம் 2008ன்படி கைது செய்வோம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us