/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ அறிவின் தளம் தமிழகம்: ராம்நாத் கோவிந்த் பெருமிதம் அறிவின் தளம் தமிழகம்: ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
அறிவின் தளம் தமிழகம்: ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
அறிவின் தளம் தமிழகம்: ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
அறிவின் தளம் தமிழகம்: ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
ADDED : செப் 24, 2025 03:24 AM

தென்காசி:''சங்ககாலத்திலிருந்தே தமிழகம் அறிவின் தளமாக இருந்து இந்தியா முழுவதும் ஒலித்தது'' என, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.
வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3212 இணைந்து, வாசுதேவநல்லுார் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் “ஒரே தேசம் - ஒரே கனவு” விழா நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
இளைஞர்கள் எப்போதும் புதுமை, ஆற்றல், உறுதி ஆகியவற்றின் அடையாளம். உலகில் தங்கள் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றனர். தென்காசி எப்போதும் 'தென்னக காசி' என போற்றப்படுகிறது. சங்ககாலத்திலிருந்தே தமிழகம் அறிவின் தளமாக இருந்து, இந்தியா முழுவதும் ஒலித்தது. சுதந்திரப் போராட்டத்தில் மேற்கு வங்கம், பஞ்சாப், தமிழகம், மஹாராஷ்டிரா மாநிலங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. அதுவே நம் தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
இந்திய சினிமாவின் பெருமை நடிகர் மோகன்லால் தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார். பல மொழிகளில் மக்களின் இதயங்களை இணைத்த அவரது சாதனை, “ஒரே தேசம் - ஒரே கனவு” என்ற கருத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த கோஷம் வெறும் சொற்களல்ல. அது ஒரு நினைவூட்டல். பல்வேறு மொழி, பண்பாடு, வழக்கங்கள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே கனவால் பிணைக்கப்பட்டுள்ளோம். அந்த கனவு - 2047க்குள் அறிவார்ந்த, வளமான, முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதே. வறுமையை ஒழிக்க, கிராமங்களை நவீனமாக்க, பெண்களை வலுப்படுத்த, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும். நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் உயர்தரக் கல்வி பெற வேண்டும். முன்னேற்றம் சிலருக்கே உரியது அல்ல; அது அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம்.
'ஒரே தேசம் - ஒரே கனவு' என்ற இலக்கின் உண்மை இதுவே. நாம் அனைவரும் ஒரே உறுதி, ஒரே இலக்குடன் செயல்பட்டால்தான் இந்த கனவை நனவாக்க முடியும் என்றார்.
விழாவில் ஜோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி, ரோட்டரி 3212 மாவட்ட ஆளுநர் தினேஷ்பாபு, வியாசா கல்லுாரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் சாதனை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாய்ஸ் ஆப் தென்காசி தலைமை செயல் அதிகாரி காருண்யா குணவதி நன்றி கூறினார்.