Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை 93 ஆண்டுகளாக திட்டம் முடக்கம்

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை 93 ஆண்டுகளாக திட்டம் முடக்கம்

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை 93 ஆண்டுகளாக திட்டம் முடக்கம்

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை 93 ஆண்டுகளாக திட்டம் முடக்கம்

ADDED : மே 11, 2025 03:08 AM


Google News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம், நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால், தொடர்ந்து, 93 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைக்க, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1932ல் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, வழித்தடமும் அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்களும் பதிக்கப்பட்டன. ஆனால், 1946ல் திட்டம் நிறுத்தப் பட்டது.

கருத்துரு


பின், 2000ல் மறு அளவீடு செய்யப்பட்டு, 101 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு, தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டத்தால் லாபம் இருக்காது எனக்கூறி, கிடப்பில் போடப்பட்டது.

இந்த ரயில்பாதை திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி, 2012ல் பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், வர்த்தக சங்கம், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், ரயில் பயணியர் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் ஆய்வு செய்ய, 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒப்புதல்


கடந்த, 2013 - 14ல் ரயில்வே பட்ஜெட்டில், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே, 47.2 கி.மீ., துாரத்திற்கு, 290.05 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் பாதை அமைக்க, ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

பின், 2013ல், 312.7 கோடி ரூபாய் மதிப்பில், ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, ரயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்தது.

மீண்டும் 2015ல், இத்திட்டத்திற்கு, 400 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால், இத்திட்டம் கிடப்பில் உள்ளது.

சில மாதங்களுக்கு முன், தஞ்சாவூருக்கு வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, கூறினார். இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்க தலைவர் விவேகானந்தம் கூறியதாவது:

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து, ஜனவரியில், தஞ்சாவூர், திருவாரூர் கலெக்டர்கள் தலைமையில் ரயில்வே துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆனால், அது குறித்த முடிவுகள் வரவில்லை.

சந்தேகம்


இத்திட்டம் வரும் பட்சத்தில், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து குறையும், தேங்காய், கடல்வள பொருட்கள் வர்த்தகமும் பெருகும். ஆட்சிக்கு வரும் கட்சியினர், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டத்தை வாக்குறுதியாகவும், ஓட்டு வங்கியாகவும் தான் பார்க்கின்றனர்.

தொடர்ந்து, 93 ஆண்டு களாக கிடப்பில் இருப்பதால், இந்த ரயில்பாதை திட்டம் நுாற்றாண்டுகளை கடந்தாலும் நிறைவேறுமா என்ற சந்தேகம் உருவாகிஉள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us