ரோட்டோர மண் சரிவால் விபத்து அபாயம்
ரோட்டோர மண் சரிவால் விபத்து அபாயம்
ரோட்டோர மண் சரிவால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 14, 2024 04:19 AM

கூடலுார், : கூடலுாரில் இருந்து கருநாக்கமுத்தன்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
கூடலுாரில் இருந்து கருநாக்கமுத்தன்பட்டி விலக்கு வரையுள்ள 4 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் ஆங்கூர்பாளையம் விலக்கு பாலத்தை ஒட்டி ரோட்டோரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கைக்காக தடுப்புக் கம்புகள்வைத்துள்ளனர்.
சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களும், விவசாய நிலங்களுக்கு விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களும் அதிகமாக இவ்வழியே சென்று வருகின்றன. மிகப் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் மண் சரிவை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் கூடலுாரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டை ஒட்டியுள்ள ஓடை வழியாக செல்வதால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முழுமையாக அனைத்து இடங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.