Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆக்சிஜன் தரும் அடர்வன குறுங்காடு்

ஆக்சிஜன் தரும் அடர்வன குறுங்காடு்

ஆக்சிஜன் தரும் அடர்வன குறுங்காடு்

ஆக்சிஜன் தரும் அடர்வன குறுங்காடு்

ADDED : ஜூன் 23, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
மக்கள் தொகை அதிகரிக்கும் போது குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. வீடுகள் கட்டுவதற்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. மனிதன் உயிர் வாழ முக்கிய தேவையாக உள்ள ஆக்சிஜனை மரங்கள் அதிகம் தருகின்றன.

மரங்களின் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும் சமீபகாலமாக மரக்கன்றுகளை நட்டு வளர்பதில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இருந்த போதிலும் 'மியாவாக்கி' என, அழைக்கப்படும் அடர்வன குறுங்காடுகளால் ஒரே இடத்தில் கூடுதல் மரங்களை வளர்க்க முடிகிறது.

இதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கும், பல்லுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கும், காற்று மாசுபடுவதைக் குறைப்பதற்கும் வழி பிறக்கிறது.

சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அடர்ந்த மரங்களின் அடியில் அமரும் போது அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.

சில மாதங்களுக்கு முன் சுகாதார நிலையத்தில் அடர்வன குறுங்காடுகள் அமைக்கப்பட்டு நன்கு வளர்ந்துள்ளன. பட்டாம்பூச்சிகள், சிறு பூச்சியினங்கள், பல்வேறு பறவையினங்களின் பெருக்கத்திற்கு இவை உதவுகின்றன.

சுவாசிக்க சுத்தமான காற்று


அருண், சோலைக்குள் கூடல் உறுப்பினர், கூடலுார்: கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் மரங்கள் அதிகமாக உள்ளன. இதுதவிர மூலிகை தாவரங்கள் அதிகமாக வளர்க்கப் படுகின்றன. மேலும் வளாகத்தின் ஒரு பகுதியில் அடர் வன குறுங்காடுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பல வகையான பறவைகள், பட்டாம் பூச்சிகளின் வாழ்விடமாகவும் இது அமைந்துள்ளது. ஆய்வக கட்டடங்கள் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் நிலையில் எந்த ஒரு மரங்களையும் அகற்றாமல் பணிகள் நடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அடர்ந்த மரங்களின் நடுவே அமரும் போது அவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது., என்றார்.

குறுங்காடு அவசியம்


நீலகண்டன், சமூக ஆர்வலர், கூடலுார்: அடர்வன குறுங்காடுகளை கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைத்தது போல் கேரள எல்லையின் ஓரங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஆங்காங்கே அமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும். மேலும் குளங்களின் கரைப் பகுதியில் இது போன்ற காடுகளை அமைத்தால் குளத்தின் கரைப்பகுதி பலமடைவதுடன் பறவை இனங்கள் அதிகம் குவியும்.

நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு விரிவாக்க பணிக்கு முன்னதாக இருந்த குளுமையான கூடலுாரை மீண்டும் பார்க்க வேண்டும் எனில் அடர்வன குறுங்காடுகளை அதிகம் அமைக்க முன்வர வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us