Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

ADDED : மார் 25, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட 4,5 வது வார்டு எ.புதுக்கோட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் உவர்ப்பு நீரை குடிநீராக பயன்படுத்துவதால் சிறுநீரக கல் அடைப்பு நோயால் அவதிப்படுகின்றனர்.

எண்டப்புளி ஊராட்சி, எ.புதுக்கோட்டை, கலைஞர் நகர், கிழக்கு தெரு, வடக்கு தெரு, அண்ணா நகர்,அருளானந்தபுரம், நேருநகர், ஜே.கே.காலனி உட்பட பல பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். எண்டப்புளி ஊராட்சியிலிருந்து இரு வார்டுகளை பிரித்து 'தனி ஊராட்சியாக' மாற்ற வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இப்பகுதியில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

உவர்ப்பு நீரால் கல் அடைப்பு


ஜெயக்கொடி: எ.புதுக்கோட்டை: இப் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கி தரவில்லை.

தெருக்களில் ஆழ்துளை குழாய் அமைத்து அதில் கிடைக்கும் உவர்ப்பு நீரை குடிநீராக பயன்படுத்துகிறோம். போர்வெல் நீரை பல ஆண்டுகளாக குடிப்பதால் சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்பதால் என்னைப் போல் பலரும் அவதிப்படுகிறோம்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு கேட்டு வருவோர் குடிநீர் வசதி செய்து தருவோம் என வாக்குறுதிகள் கொடுப்பர். ஆனால் இதுவரை குடிநீர் வந்தபாடில்லை. சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து இப் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும். அல்லது முருகமலை நகர், எண்டப்புளி, எ.புதுப்பட்டி ஊராட்சிகளுக்கு செழும்பு பகுதியில் கிணறு வெட்டி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதே ஊராட்சிக்கு உட்பட்ட எங்கள் பகுதிக்கும் செழும்பு குடிநீரை வழங்க வேண்டும்.

துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்துங்கள்


மனோன்மணி, வடக்குதெரு, எ.புதுக்கோட்டை: இங்கு குடிநீர், சாக்கடை, ரோடு வசதி இன்றி அவதிப்படுகிறோம். சாக்கடை தூர்வார பணியாளர்கள் வருவதில்லை.

இங்குள்ள துணை சுகாதார நிலையத்திற்கு 30க்கும் அதிகமான உட்கடை கிராமங்களில் இருந்து கர்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்து செல்கின்றனர்.

தொடர் காய்ச்சல், சிகிச்சைகளுக்கு 4 கி.மீ., தூரம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இரவில் சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர்.

மக்கள் தொகை அடிப்படையில் துணை சுகாதார நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும்.

பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்


செல்லப்பாண்டி, எ.புதுக்கோட்டை: இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் உயர்த்த கோரி கல்வித்துறைக்கு பல முறை கடிதம் அனுப்பி உள்ளோம். நடவடிக்கை இல்லை.

இரவில் பள்ளி சுவர் ஏறி குதித்து சிலர் மதுபாராக மாற்றுகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.

தொட்டால் ஷாக்


பிரியங்கா, கிராம சுகாதார செவிலியர், எ.புதுக்கோட்டை: இங்கு கர்ப்பிணிகளுக்கு மருத்துவம், குழந்தைகளுக்கு தடுப்பூசி என வாரம் 30 க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. ஒரு பக்க அறை சுவரில் மின்கசிவு காரணமாக அந்தப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் மேற்கூரையிலிருந்து கட்டத்திற்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது சுவரை தொட்டால் ஷாக் அடிக்கும். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us