Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ தி.மு.க., அரசு வெற்று காகிதமே நயினார் நாகேந்திரன் பேட்டி

தி.மு.க., அரசு வெற்று காகிதமே நயினார் நாகேந்திரன் பேட்டி

தி.மு.க., அரசு வெற்று காகிதமே நயினார் நாகேந்திரன் பேட்டி

தி.மு.க., அரசு வெற்று காகிதமே நயினார் நாகேந்திரன் பேட்டி

ADDED : செப் 26, 2025 10:55 PM


Google News
திருநெல்வேலி:“தி.மு.க., அரசே வெற்று காகிதம் தான். வெளிநாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெறும் வெற்று பேப்பரை காட்டுகிறார். ஆட்சியில் ஜனநாயகமே இல்லை. தி.மு.க.,வை நம்பி காங்கிரஸ் இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படும்,” என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம், பொன். ராதாகிருஷ்ணன், பொன். பாலகணபதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கல்வியில் பின்தங்கி உள்ளோம். பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு அரசு சுய விளம்பரம் செய்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் 4000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால் அரசு நிரப்பவில்லை.

அரசின் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர். சிலர் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. அரசு இதன் மூலம் விளம்பரத்தை தேடுகிறது.

காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என காங்கிரஸ் கூறுகிறது. அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது தெரியவில்லை. அ.தி.மு.க., எம்.பி., சண்முகத்தை நான் சந்தித்தது சாதாரண விஷயம் தான். இதற்கெல்லாம் டிசம்பருக்குள் பதில் கிடைத்து விடும்.

அக்.,12 முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தொடங்குகிறோம். தொடர்ந்து மதுரையிலிருந்து யாத்திரை நடைபெறும். அதில் பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நல்ல அனுபவம் வாய்ந்தவர். 'தி.மு.க., அரசு வேண்டாம்' என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டனர். பணம் கொடுத்தாலும், மக்கள் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர்.

கூட்டணி மாறலாம் என கடம்பூர் ராஜு பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றே கூறியுள்ளார். மதுபானம், கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களை தி.மு.க., அரசு கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம் ஒழுங்கை கெடுத்தவர் டேவிட்சன் தேவா சீர்வாதமே. ஒருபக்க அரசாங்கமாகவும், ஓட்டு வங்கிக்கான அரசாங்கமாகவும் தி.மு.க., செயல்படுகிறது. விரைவில் இந்த அரசு வீழ்ந்து விடும்.

நிரந்தர பணி வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மாறிவிட்டது. ஏமாற்றி ஓட்டு வாங்கிய அரசாக தி.மு.க., அரசு உள்ளது. காங்கிரசிலிருந்து பலரை தி.மு.க., தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது.

வெளிநாட்டு முதலீடு குறித்த வெள்ளை அறிக்கை குறித்து நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெறும் வெற்று காகிதத்தை காட்டுகிறார். இது ஜனநாயகமற்ற செயல். இந்த அரசாங்கமே வெற்று காகிதம் தான் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us