ADDED : ஜூன் 30, 2024 12:25 AM

சோழவரம்:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் உள்ள இணைப்பு சாலையின் ஓரங்களில் குப்பை கொட்டி குவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகளில் குடியிருப்புகளின் கழிவுநீரும் இங்கு கொண்டு வந்த விடப்படுகிறது.
காய்கறி கடைகள், உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகள், குடியிருப்புகளின் கழிவுநீர் என கொட்டி குவிக்கப்படுவதால், அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். குப்பை கழிவுகள் இணைப்பு சாலை வரை சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக அமைகிறது.
இருசக்கர வாகனங்களில் வழுவழுப்பான பிளாஸ்டிக் கழிவுகளில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும், குப்பை கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள், நாய்கள் இவற்றால், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.