மீண்டும் மீண்டும்! பழவேற்காடு ஏரியில் மணல் திட்டுகள் அதிகரிப்பு:56 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மீண்டும் மீண்டும்! பழவேற்காடு ஏரியில் மணல் திட்டுகள் அதிகரிப்பு:56 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
UPDATED : செப் 08, 2026 05:25 PM
ADDED : செப் 08, 2026 05:21 PM

பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில் மணல் திட்டுகள் மீண்டும் மீண்டும் அதிகரித்து வருவதால், படகு போக்குவரத்து மற்றும் மீன்வளம் பாதித்து வருகிறது. அதனால், பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள, 56 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஏரியை படிப்படியாக துார் வாரி சீரமைப்பதற்கான திட்டமிடல்களை தொடங்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியானது, தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது, ஒடிஷா மாநிலத்தில் உள்ள, 'சில்கா' ஏரிக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரியாகும்.
ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணி ஆறுகள் மற்றும் பகிம்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும், 20 - 25 டி.எம்.சி., மழைநீர், பழவேற்காடு ஏரி வழியாக வங்காள விரிகுடா கடலுக்கு செல்கிறது.
முகத்துவாரம் வழியாக ஏரிக்கு வரும் கடல் நீரும், நீர்நிலைகள் மூலம் கிடைக்கும் நன்னீரும் உவர்ப்பு நீராக மாறுகிறது.
இந்த உவர்ப்பு நீரில் மீன், இறால், நண்டு, நத்தை, மெல்லுடலிகள் என, பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அதனால், அப்பகுதி மீனவர்களுக்கு தேவையான மீன்வளத்திற்கு, பழவேற்காடு உவர்ப்பு நீர் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த ஏரியானது, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள ஆரம்பாக்கத்தில் தொடங்கி, பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு வரை, 56 மீனவ கிராமங்களை சேர்ந்த, 20 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
கடந்த 2015 பெருவெள்ளத்தின்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆறுகள் மூலம் அடித்து வரப்பட்ட மணல், பழவேற்காடு ஏரியில் குவிந்ததால், மீன்பிடி பகுதிகளில் மணல் திட்டுகள் ஏற்பட்டன.
அதன்பின், அடுத்து வந்த ஆண்டுகளில், ஏரியின் பல்வேறு பகுதிகளில் மணல் திட்டுகள் அதிகரித்தன. இதனால், பழவேற்காடு ஏரி மற்றும் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும் மீனவர்கள், ஏரியில் மீன்பிடி தொழில் செய்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மணல் திட்டுகளில் படகுகள் சிக்கி, அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைவதால், மீன்வளமும் பாதித்து வருகிறது.
தற்போது, ஏரியின் பல்வேறு பகுதிகளில் மணல் திட்டுகள் அதிகரித்து, அவை பச்சை நிறமாக மாறி வருகின்றன. தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களிலும், ஏரியின் ஆழம், 15ல் 3 மீட்டராக குறைந்து உள்ளது.
ஏரியின் மீன் வளத்தை மட்டுமே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள, 'சில்கா' உவர்ப்பு நீர் ஏரியை, மத்திய - மாநில அரசுகள் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் துார்வாரி பராமரிக்கின்றன.
அதுபோல், தமிழக அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு, சரியான திட்டமிடல் மூலம், ஏரியை படிப்படியாக துார்வாரி பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு ஆங்கிலேயர் காலத்தில், 'டிரஜ்ஜர்' எனும் துார்வாரும் இயந்திரங்கள் உதவியுடன், பழவேற்காடு ஏரி துார் வாரப்பட்டது. அதன்பின், அதற்கான முன்னெடுப்பில் எந்த அரசும் கவனம் செலுத்தவில்லை. மணல் திட்டுகளால் நாளுக்கு நாள் மீன்வளம் குறைந்து வருகிறது. பரந்து கிடக்கும் ஏரியை ஆய்வு செய்து, படிப்படியாக துார்வார, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - துரைமகேந்திரன் தலைவர், தமிழ்நாடு மீனவர் சங்கம்.
மீனவர்களுக்கு பிரச்னை பழவேற்காடு ஏரியை பொறுத்தவரை, 'பாடு' முறையில், மீனவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். மணல் திட்டுகள் அதிகரிப்பதால், மீன்பிடி பகுதிகள் குறைந்து வருகின்றன. இதனால், மீனவர் மாற்று இடங்களை தேடி, வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இரு பகுதி மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அரசு தீவிர கவனம் செலுத்தி, இதற்கு தீர்வு காண வேண்டும். - முருகன், மீனவர், இடமணிகுப்பம்.
