Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூரில் குவாரி இயங்காததால் சவுடு மண்...தட்டுப்பாடு: செங்கல், மண்பாண்டம் உற்பத்தி கடும் பாதிப்பு

திருவள்ளூரில் குவாரி இயங்காததால் சவுடு மண்...தட்டுப்பாடு: செங்கல், மண்பாண்டம் உற்பத்தி கடும் பாதிப்பு

திருவள்ளூரில் குவாரி இயங்காததால் சவுடு மண்...தட்டுப்பாடு: செங்கல், மண்பாண்டம் உற்பத்தி கடும் பாதிப்பு

திருவள்ளூரில் குவாரி இயங்காததால் சவுடு மண்...தட்டுப்பாடு: செங்கல், மண்பாண்டம் உற்பத்தி கடும் பாதிப்பு

ADDED : மார் 20, 2025 09:17 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக குவாரிகள் இயங்காததால், மண் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கட்டுமான தொழில், செங்கல் தயாரிப்பு மற்றும் மண்பாண்டம் உற்பத்தியும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 917 ஏரிகள் உள்ளன. துார்ந்து கிடக்கும் ஏரிகளை அவ்வப்போது துார் வாருவதன் வாயிலாக, கூடுதல் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. மேலும், துார் வாரி, மண்ணை அப்புறப்படுத்த, தனியாருக்கு குவாரி உரிமம் வழங்கப்படுகிறது.

இதன் வாயிலாக, அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைப்பதுடன், கட்டுமானம், செங்கல் மற்றும் மண்பாண்டம் உற்பத்திக்கும் பயன்படுகிறது. ஏரிகளை துார் வாரும் பணியை கனிம வளம் மற்றும் பொதுப்பணி துறையினர் வழங்குகின்றனர். குவாரி தொழிலை நம்பி மாவட்டத்தில் குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி உரிமையாளர், ஓட்டுநர் என, 10,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் எடுக்கப்படும் சவுடு மண், திருவள்ளூர் மட்டுமல்லாது, சென்னை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டிற்காக சவுடு மண் குவாரி ஏலம் விடப்படவில்லை. இதன் காரணமாக, சவுடு மண் கிடைக்காமல், வீடு கட்டுவோர், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் மண் பாண்டம் உற்பத்தி செய்வோர், கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

இதனால், கட்டுமான செலவு அதிகரித்துடன், வளர்ச்சி பணிகளும் தேக்கமடைந்து உள்ளது. ஒரு சிலர் கூடுதல் விலை கொடுத்து, தமிழக எல்லையோரம் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சத்தியவேடு, ஸ்ரீசிட்டி, கே.கே.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சவுடு மண் பெற்று வருகின்றனர். இதற்காக ஒரு லோடு 35,000 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதன் காரணமாக, கட்டுமான செலவும் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில், 550 சூளைகளில் தற்போது 250ல் மட்டுமே செங்கல் தயாரிப்பதற்கான மண் உள்ளது. அதுவும், ஒரு ஆண்டுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும். சவுடு மண் இந்த ஆண்டிலும் கிடைக்கா விட்டால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிப்படையும். மேலும், தற்போது 3,000 செங்கல் கொண்ட ஒரு லோடு 30,000 ரூபாய்க்கு விற்பனையாகும் சூழலில், அடுத்த ஆண்டில், 60,000 ரூபாயாக இருமடங்கு உயரும் அபாயம் உள்ளதாக, செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், செங்கல் தொழிற்சாலையை நம்பி 3 லட்சம் தொழிலாளர்கள் மாவட்டம் முழுதும் உள்ளனர். செங்கல் தொழில் நடைபெறாவிட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. குவாரி இயங்காததால், அதை நம்பி உள்ளோரும், பாதிப்படைந்துள்ளனர்.

இது குறித்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மண் குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டால் தான், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும். இது கடந்த கால நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக வணிக பயன்பாட்டிற்கான குவாரிகள் அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக, வீடு கட்டும் தொழில், செங்கல் உற்பத்தி பாதிப்படைந்ததுடன், கட்டுமான செலவும் அதிகரித்து விட்டது. தேவையான மண் கிடைக்காமல் திருவள்ளூர் மற்றும் சென்னை நகரின் அனைத்து வளர்ச்சி பணிகளும் தேக்கமடைந்து விட்டது. எனவே, கடந்த கால நடைமுறையைப் போல், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மண் குவாரிகள் செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கனிமவள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது அரசு பணிகளுக்கு மட்டுமே, சவுடு மண் குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சவுடு மண் அனுமதியை அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசு உத்தரவிட்டால் தான் வணிக பயன்பாட்டிற்கான அனுமதி வழங்க இயலும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us