Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் நகராட்சியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி

திருவள்ளூர் நகராட்சியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி

திருவள்ளூர் நகராட்சியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி

திருவள்ளூர் நகராட்சியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி

ADDED : பிப் 24, 2024 07:56 PM


Google News
திருவள்ளூர்:பட்டதாரி இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில், 1.97 கோடி ரூபாய் மதிப்பில், நுாலக வதியுடன் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, தினமும் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டதாரிகள், போட்டித் தேர்வு எழுத ஆர்வமாக உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குடிமைப்பணிகள் தேர்வு, ரயில்வே மற்றும் வங்கி தேர்வாணையம் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சி பெற சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செலவு செய்து சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, ஜெயின் நகரில், நுாலக வசதியுடன் கூடிய, அறிவு சார் மையம், 1.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி, கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

முதல், இரண்டாம் தளம் என, மொத்தம், 4,800 ச.அடி பரப்பளவில் செயல்படும் இந்த அறிவு சார் மையத்திற்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் சுபாஷினி கூறியதாவது:

கீழ் தளத்தில் உள்ள நுாலகத்தில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான 8,000 புத்தகங்கள் உள்ளன. நுாலகத்திற்கு வருவோர், புத்தகங்களை வாசித்து, தேவையான குறிப்பெடுக்க, இருக்கை வசதி உள்ளது.

மேலும், இணையதள வசதியுடன், 17 கம்ப்யூட்டர்கள் உள்ளன. மாணவர்கள், இவற்றையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு, பயிற்சி அளிக்க பெரிய அளவிலான 'ஸ்மார்ட் டிவி' அமைக்கப்பட்டு உள்ளது. மாடியில், நுாறு பேர் அமரும் வகையில், கூட்ட அரங்கும் உள்ளது.

மேலும், நுாலகம் அருகில், குழந்தைகள் விளையாட்டுடன், கல்வி பயிலவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், போட்டித் தேர்வுக்கு தயாராவோர், சென்னைக்கு செல்ல வேண்டியிருக்காது. இங்கேயே, அவர்களுக்கு தேவையான புத்தகங்கள், பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us