/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை வரி வசூல் நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை வரி வசூல்
நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை வரி வசூல்
நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை வரி வசூல்
நகராட்சி, பேரூராட்சிகளில் போல் 6 மாதத்திற்கு ஒருமுறை வரி வசூல்
ADDED : ஜூன் 20, 2025 08:34 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 2023க்கு முன்பு வரை, வீடுகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், அந்தந்த ஊராட்சி தலைவர் மற்றும் செயலர்கள் வாயிலாக வசூலித்து வந்தனர்.
கடந்தாண்டு முதல் அனைத்து ஊராட்சிகளின் வருவாயை உயர்த்தவும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு தேவையான நிதியுதவி பெறுவதற்கும், அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் வரி நிர்ணயம் செய்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, ஊராட்சி செயலர்கள் வசூலித்து வந்தனர்.
ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் 44 ரூபாயும், அதிகபட்சமாக 220 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்பட்டது.ஒன்றரை மாதங்களுக்கு முன், தமிழக அரசு அனைத்து ஊராட்சிகளின் வருவாயை உயர்த்தவும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும், வீடுகளை தரம் பிரித்து, சதுரடி கணக்கில், சொத்துவரி நிர்ணயம் செய்து வசூலிக்க வேண்டும் என, சுற்றிக்கை அனுப்பியது.
தொடர்ந்து, கூரை வீட்டிற்கு சதுரடிக்கு, 0.20 பைசாவும், ஓட்டு வீட்டிற்கு சதுரடிக்கு, 0.30 - 0.60 பைசா வரையும், தளம் போட்ட கான்கிரீட் வீட்டிற்கு சதுரடிக்கு, 0.50 - 1 ரூபாய் வரை என, சொத்து வரி நிர்ணயம் செய்தும், அதன்படி வீடுகள் குறித்து கணக்கெடுத்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வசூலில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 29ம் தேதி சதுரடி கணக்கில் சொத்து வரி நிர்ணயம் செய்து வசூலிப்பதை ரத்து செய்து, பழைய முறையில் வரி வசூலிக்க வேண்டும். மேலும், அந்த சொத்து வரி தொகையை இரண்டாக பிரித்து, ஆறு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்க வேண்டும் எனவும் அரசாணை வெளியிட்டது.
தற்போது, ஊராட்சி செயலர்கள் பழைய சொத்து வரியை, இரண்டாக பிரித்து வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
வீடுகளுக்கு சொத்துவரி சதுரடி கணக்கில் வசூலித்தால், குறைந்தபட்சம் 600 - 5,500 ரூபாய் வரை ஆண்டுக்கு ஒரு முறை சொத்துவரி செலுத்த வேண்டும்.
இந்த வரியை கிராம மக்கள் கட்ட முடியாது என்பதால், பழைய முறையில் சொத்து வரி நிர்ணயம் செய்தும், அந்த தொகையை இரு தவணைகளாக செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடப்பாண்டில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் போல், இனி ஊராட்சிகளிலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சொத்து வரி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.