ADDED : ஜூன் 20, 2025 01:54 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, நிழற்குடை அமைக்கும் பணி துவங்கிய நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
பூண்டி ஒன்றியம், கச்சூர் ஊராட்சியில், மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை. இங்குள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
பொதுமக்கள் பேருந்துக்கு காத்திருக்கும் போது, மழை, வெயிலால் அவதிப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக பேருந்து நிழற்குடை அமைக்க கடந்த பிப்ரவரியில் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி துவங்கி துரிதமாக நடந்தது. பாதி பணி முடிந்த நிலையில் தற்போது பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.