Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீஞ்சூரில் எச்சரிக்கையை மீறி பேனர்கள் காவல்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி

மீஞ்சூரில் எச்சரிக்கையை மீறி பேனர்கள் காவல்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி

மீஞ்சூரில் எச்சரிக்கையை மீறி பேனர்கள் காவல்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி

மீஞ்சூரில் எச்சரிக்கையை மீறி பேனர்கள் காவல்துறை மீது வியாபாரிகள் அதிருப்தி

ADDED : பிப் 29, 2024 09:46 PM


Google News
Latest Tamil News
மீஞ்சூர்,:பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி மீஞ்சூரை சுற்றியுள்ள, 100 கிராமங்களின் வியாபார மையமாக உள்ளது.

இங்கு, சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் கடைகளை மறைத்து வைக்கப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

கடைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளின் நுழைவாயிலையும் மறித்து வைக்கப்படுவதால், அவசர சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பஜார் பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு போலீசார் தடைவிதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். எச்சரிக்கையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டும் உள்ளது.

ஆனால், அதை யாரும் பொருட்டுபடுத்துவதில்லை. எச்சரிக்கையை மீறி அங்கு விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன.

மேலும், அந்தந்த இடங்களை அரசியல் கட்சியினர் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கட்சி நிகழ்ச்சிகள் முடிந்த பின்னும் அகற்றாமல் வைத்துள்ளனர்.

இது குறித்து மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் ஷேக் அகமது தெரிவித்ததாவது:

அரசியல் கட்சியினரின் கட்சி தொடர்பான விளம்பரங்கள், தனிநபர்களின் வாழ்த்து விளம்பரங்கள் என, மீஞ்சூர் பஜார் பகுதி முழுதும் விளம்பர பதாகைகள் நிறைந்து காணப்படுகின்றன.

மேலும், கடைகளின் முகப்பு பகுதி முழுதும் மறைத்து வைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வந்து செல்வதற்கும் வழியில்லை.

இது தொடர்பாக பலமுறை காவல் துறையிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. விளம்பர பதாகைகள் வைப்பதற்கு, நீதிமன்றம் தடைவிதித்து உள்ள நிலையில், இப்பகுதியில் தடையை மீறுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்போர் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us