ADDED : ஜூன் 11, 2025 09:19 PM
மணவாள நகர்:பைக்கில் சென்ற தம்பதி மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
திருவள்ளூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 52. இவர் நேற்று முன்தினம் தன் மனைவி செல்வி, 45, என்பவருடன் போளிவாக்கம் கோமதி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு டி.வி.எஸ். ஸ்கூட்டி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் டி.சி.எல்., தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மாருதி கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்ததில் செல்வி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மணவாள நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.