Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடி துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பர பவனியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துாத்துக்குடி துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பர பவனியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துாத்துக்குடி துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பர பவனியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துாத்துக்குடி துாய பனிமய மாதா சர்ச் திருவிழா சப்பர பவனியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

ADDED : ஆக 06, 2024 12:35 AM


Google News
துாத்துக்குடி:புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச்களில் ஒன்றான துாத்துக்குடி துாய பனிமய மாதா சர்ச் திருவிழா, ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 11 நாட்களும் தினமும் ஜெபமாலை, மறையுரை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.

நிறைவு நாளான நேற்று காலை 7:30 மணிக்கு மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடந்தது. 9:00 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில், மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலி நடந்தது.

உபகாரிகளுக்கான திருப்பலியை 10:00 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் நடத்தினார். மாலை 5:00 மணிக்கு பாளை., மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவுத் திருப்பலி நடந்தது.

ஆலய நிகழ்ச்சிகளில் மறைமாவட்ட முதன்மை குரு, பங்குதந்தைகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் இறைமக்கள் பங்கேற்றனர்.

சிகர நிகழ்ச்சியாக நகர வீதிகளில் பொன் மகுடம் தரித்த துாய பனிமய மாதாவின் திருவுருவ சப்பர பவனி இரவு 7:00 மணிக்கு நடந்தது. ஆலயத்தின் பின்பகுதியில் இருந்து புறப்பட்ட பவனி, பெரியகடை வீதி, கிரேட் காட்டன் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று, மீண்டும் ஆலய வளாகம் அடைந்தது.

பவனியில் ஆலய பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பாலன் மற்றும் இலங்கை, மலேசியா உட்பட வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'மரியே வாழ்க' என முழக்கமிட்டபடி சென்றனர்.

பவனிக்குப் பின், பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக் கொடுத்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி இரவு 10:00 மணிக்கு நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு, எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழா காரணமாக, துாத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us