ADDED : ஜூன் 17, 2025 11:22 PM

தாராபும்; திருப்பூர் மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதியில் கிராவல் மண் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போலியான 'டிரிப்' சீட்டுகளை வைத்து கடத்தப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக அன்றாடம் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மண் கடத்தல் குறித்து உள்ளூர் பொதுமக்கள் வருவாய்த்துறை, போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பது பெயரளவில் தான் உள்ளது.
புகார் கொடுத்த மக்கள் குறித்து அறியும் மண் கும்பல் அவர்களை மிரட்டவும் செய்கின்றனர். கிராவல், செம் மண் கடத்தல் விவகாரத்தில் அனைத்து துறையினரும் மவுனம் காத்து வருவதாக கிராம மக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு உள்ளது.
மண் கடத்தல் விஷயத்தில் ஏதாவது பிரச்னைகள் எழும் போது, கனிமவளத்துறையினர் பெயருக்கு ஆய்வு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கின்றனர். அதில் சிக்குபவர்கள் அனைவரும் லாரி டிரைவர்கள் மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள மண் கடத்தல் கும்பல் முக்கிய புள்ளி, அரசியல்வாதிகள் என, அனைவரும் தப்பித்து கொள்கின்றனர்.
இந்நிலையில், தாராபுரம், வீராச்சிமங்கலம், காட்டூரில் முறைகேடாக செம்மண் கடத்தல் புகார் தொடர்பாக, கனிமவளத்துறை சேலம் பறக்கும் படை துணை இயக்குநர் இளங்கோவன், ஈரோடு துணை இயக்குநர் (பொ) சசிகுமார், உதவி புவியியலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சோதனை செய்தனர். அதிகாரிகளை கண்டதும், சிலர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். சோதனையில், மூன்று கேரள மற்றும் ஒரு தமிழக பதிவெண் கொண்ட லாரி என்பது தெரிந்தது. லாரியில், 30 யூனிட் செம்மண் கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது.
செம்மண் லோடுடன் நான்கு லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி சென்ற டிரைவர், லாரி உரிமையாளர் குறித்து போலீசில் புகார் அளித்தனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.