Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்கள் பயன்படுத்தும் பாதையில் கம்பி வேலி; அமைதி பேச்சில் முடிவு எட்டாமல் இழுபறி

மக்கள் பயன்படுத்தும் பாதையில் கம்பி வேலி; அமைதி பேச்சில் முடிவு எட்டாமல் இழுபறி

மக்கள் பயன்படுத்தும் பாதையில் கம்பி வேலி; அமைதி பேச்சில் முடிவு எட்டாமல் இழுபறி

மக்கள் பயன்படுத்தும் பாதையில் கம்பி வேலி; அமைதி பேச்சில் முடிவு எட்டாமல் இழுபறி

ADDED : செப் 16, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; ஊத்துக்குளி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் கோவில் நிர்வாகம் கம்பி வேலி அமைக்கும் பணி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடத்தப்பட்ட அமைதிப் பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

ஊத்துக்குளி அருகேயுள்ள கதித்தமலை கோவிலுக்குச் சொந்தமான நிலம் தென்முக காங்கயம்பாளையம் கிராமத்தில் உள்ளது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோவிலுக்கு தானமாக அவற்றை நீண்ட காலம் முன்னரே வழங்கியுள்ளனர். இந்த இடத்தின் வழியாக, தென்முக காங்கயம்பாளையம், கஸ்துாரிபாளையம், நீலக்கவுண்டம்பாளையம் கிராமத்தினர் ஊத்துக்குளி சென்று வருகின்றனர்.

சமீபத்தில், இந்த பகுதியில் கோவில் நிர்வாகம் கம்பி வேலி அமைத்து நிலத்தை சீரமைப்பு செய்து, பயன்படுத்தும் வகையில் பணி மேற்கொண்டது. இதற்காக கம்பி வேலி அமைத்தால், மூன்று கிராம மக்கள் 5 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்த வழி விட்டு கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், கம்பி வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

அதன்பின், இப்பிரச்னை குறித்து, அமைதிப் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகேஸ்வரன் முன்னிலையில் நேற்று காலை அமைதிப் பேச்சு நடந்தது. கோவில் செயல் அலுவலர் பிரேமா, ஊர் தரப்பில் ஈஸ்வரமூர்த்தி, தமிழ் கார்க்கி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தரப்பில் பல்வேறு ஆதாரங்கள், வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

நீண்டநேரம் நடந்த பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. கோவில் தரப்பில் இது குறித்து அறநிலையத் துறை கமிஷனர் தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நேற்றைய பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் கம்பி வேலி அமைக்கும் பணி மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக அறநிலையத்துறை இணை கமிஷனரைச் சந்தித்து பேசுவது என பொதுமக்கள் முடிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us