/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 9 ஆடுகளை கொன்ற நாய்: விவசாயிகள் அதிர்ச்சி 9 ஆடுகளை கொன்ற நாய்: விவசாயிகள் அதிர்ச்சி
9 ஆடுகளை கொன்ற நாய்: விவசாயிகள் அதிர்ச்சி
9 ஆடுகளை கொன்ற நாய்: விவசாயிகள் அதிர்ச்சி
9 ஆடுகளை கொன்ற நாய்: விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : அக் 04, 2025 05:39 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர் வழியில், பிரகாஷ் என்கிற விவசாயியின் பட்டியில், மொத்தம் 60 ஆடுகள் இருந்தன. நேற்று முன்தினம் இவரது பட்டிக்குள் புகுந்த வெறிநாய் கடித்து குதறியதில், ஒன்பது ஆடுகள் அதே இடத்தில் பலியாகின; படு காயமடைந்து உயிருக்கு போராடும் ஆறு ஆடுகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பலியான ஒன்பது ஆடுகளையும் சாக்குப்பையில் போட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்துவந்து, போராட்டம் நடத்த, விவசாயிகள் திட்டமிட்டனர்.
அதற்குள், காங்கயம் தாசில்தார் மோகனன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திஆடுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர். ஏற்கனவே தொகை நிலுவையில் உள்ளநிலையில், உடனடியாக இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.இதனால், போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
காங்கயம் தாசில்தார் மோகனனிடம் கேட்டபோது, ''நாய்கடிக்கு பலியான ஆடுகள் விவரம், கால்நடைத்துறை வாயிலாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பலியாகியுள்ள ஒன்பது ஆடுகள் குறித்த விவரமும் விரைந்து அனுப்பிவைக்கப்படும். அரசிடமிருந்து ஒதுக்கீடு தொகை கிடைத்த உடன், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்,'' என்றார்.


