ADDED : பிப் 25, 2024 12:33 AM

'பிப்., 10ம் தேதிக்குள் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும்...' என கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு, அரசுப்பள்ளி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பிப்., 1ம் தேதி. குறுகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியானாலும், திறம்படவே ஆசிரியர்கள் நடத்தி முடித்துள்ளனர். பெற்றோர், மாணவரின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது. இதற்கு ஒரு சபாஷ் சொல்லித் தான் ஆக வேண்டும்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக, தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கு முன் ஆண்டு விழா நடத்துவர். இதற்காக பெரும் பட்ஜெட்டில், நிகழ்ச்சிகளை திட்டமிடுவர். இந்த பிரம்மாண்டம், பெற்றோருக்கு அந்த பள்ளியின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். இது, மாணவர் சேர்க்கைக்கு உதவும் என்பது தான், அதில் உள்ள 'லாஜிக்'.
ஆண்டு விழாவுக்காக அவர்கள் எடுக்கும் மெனக்கெடல் மிக அதிகம். நடன நிகழ்ச்சி உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகளை வடிவமைக்க அதில் நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களை வரவழைத்து, அவர்களுக்கு பெரும் தொகையை கட்டணமாக வழங்கி, பயிற்றுவிக்க செய்வர். நடன நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அணியும் ஆடை, ஆபரணங்களுக்கான தொகையை, அவர்களது பெற்றோரிடமே வசூலிப்பர்; பெற்றோரும் முழு மனதுடன் ஏற்பர்.
ஒரே அலைவரிசை இல்லை
அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை, அனைத்து பள்ளிகளும் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை. சில பள்ளிகளின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஆண்டு விழா நடத்த, பள்ளி ஆசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்; தனியார் பள்ளிகளுக்கு நிகராகவே நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நன்கொடையாளர்கள் வாயிலாக, பெரும் தொகை நிதி திரட்டி, அசத்தலாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
ஆனால், பல பள்ளிகளின் நிலை அவ்வாறு இல்லை. ஆசிரியர் எண்ணிக்கை குறைவு; ஆர்வமில்லாத பள்ளி மேலாண்மை குழு என, பல பிரச்னைகள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி, தங்களுக்கு வழங்கப்பட்ட உத் தரவையேற்று, ஆசிரியர்களும் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்கின்றனர்.
அசாத்திய திறமையாளர்கள்
திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; பலர் கல்வி, விளையாட்டு என, பல துறைகளில் அசாத்திய திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர். எனவே, தனியார் பள்ளிகளுக்கு நிகராக நடத்தப்படும் ஆண்டு விழாக்களால் மட்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துவிடாது.
மாறாக, தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டட கட்டமைப்பு, சுத்தம், சுகாதாரமான சுற்றுப்புறம், கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், தேவைக்கேற்ப ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் இருந்தால், 'தனியார் பள்ளிகளுக்கு நிகராக' என்ற வார்த்தையை தவிர்த்து, 'எங்களுக்கு நிகர் நாங்களே' என, மார்தட்டிக் கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.