/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சொகுசு காரில் வந்து கோழி திருடும் கும்பல்; கொங்கு மண்டலத்தில் ஊடுருவல்? சொகுசு காரில் வந்து கோழி திருடும் கும்பல்; கொங்கு மண்டலத்தில் ஊடுருவல்?
சொகுசு காரில் வந்து கோழி திருடும் கும்பல்; கொங்கு மண்டலத்தில் ஊடுருவல்?
சொகுசு காரில் வந்து கோழி திருடும் கும்பல்; கொங்கு மண்டலத்தில் ஊடுருவல்?
சொகுசு காரில் வந்து கோழி திருடும் கும்பல்; கொங்கு மண்டலத்தில் ஊடுருவல்?
ADDED : ஜூன் 18, 2025 12:12 AM
திருப்பூர்; மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கை வரிசை காண்பிக்கும் கோழி திருடும் கும்பல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் ஊடுருவியுள்ளனரா என, விவசாயிகள் சந்தேகம் கிளப்புகின்றனர்.
விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள பட்டிகளில், கட்டி வைக்கப்படும் ஆடுகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோழி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள், அவ்வப்போது திருடிச் செல்வது வழக்கம்.
சமீப ஆண்டுகளாக, சிலர், இத்தகைய செயலை தங்களின் தொழிலாகவே கொண்டுள்ளனர். இரு நாளுக்கு முன் அருகேயுள்ள ஈரோடு, பெருந்துறையில் சொகுசு காரில், 'டிப் டாப்' உடையணிந்து வந்த சிலர், விவசாயிகளின் தோட்டத்தில் இருந்த கோழிகளை திருடிச்சென்ற சம்பவம், அங்கிருந்த சிசிடிவி., கேமராவில் பதிவாகியிருந்தது.
இதேபோல், சிவகங்கை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் சொகுசு காரில் வந்து ஆடு திருடிச் செல்வதை தொழிலாகவே சிலர் செய்து வருகின்றனர். சில இடங்களில், அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
முந்தைய காலங்களில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், இரவில் வீடுகளின் முற்றத்திலேயே படுத்துறங்குவர். ஒரு சிறிய சப்தம் வந்தாலோ, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் குரைத்தாலோ, 'அலர்ட்' ஆகி, யாரேனும் திருடர்கள் புகுந்து விட்டனரா என கண்காணிப்பர்.
ஆனால், தற்போது, தோட்டத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகளுக்கே பாதுகாப்பற்ற நிலை இருக்கும் போது, இரவு காவல் காக்கும் பணி என்பது வெகுவாக குறைந்திருக்கிறது. இதனை சாதகமாக்கி கோழி, ஆடு திருடும் கும்பல், விவசாய நிலத்துக்குள் புகுந்து கைவரிசை காண்பித்து விடுகின்றனர்.
சமீபநாட்களாக, சொகுசு காரில் வந்து கோழி திருடும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக, தகவல் பரவிவரும் நிலையில், போலீசார் கண்காணிப்பு அதிகப்படுத்த வேண்டும்.
அதுவும், இரவில் இருள் அதிகம் சூழும், அமாவாசை நாட்களில் தான் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடக்கும் நிலையில், அந்த நாட்களில் இரவு ரோந்துப்பணியில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.