/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'கேலோ இந்தியா'; தங்கம் வென்று சாதித்தது எப்படி?'கேலோ இந்தியா'; தங்கம் வென்று சாதித்தது எப்படி?
'கேலோ இந்தியா'; தங்கம் வென்று சாதித்தது எப்படி?
'கேலோ இந்தியா'; தங்கம் வென்று சாதித்தது எப்படி?
'கேலோ இந்தியா'; தங்கம் வென்று சாதித்தது எப்படி?
ADDED : பிப் 10, 2024 11:32 PM

தமிழகத்தில் முதன்முறையாக 'கேலோ இந்தியா' போட்டி நடந்தது. இதில், திருப்பூரை சேர்ந்த ஐந்து பேர் பங்கேற்றனர்; இதில் இருவர், தங்கம் வென்றனர்.
திருப்பூர், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பவீனா, 110 மீ., மும்முறை தாண்டும் ஓட்டத்திலும்; சின்னக்கரை, பார்க்ஸ் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாண்டு படிக்கும் விஷ்ணுஸ்ரீ 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்திலும் முதலிடம் பெற்று, தங்கம் வென்றனர்.
6 மணி நேரம் கடும் பயிற்சி
பவீனா கூறியதாவது:
ம.பி.,யில் நடந்த 'கேலோ' இந்தியா போட்டியில் பங்கேற்ற போது, அங்குள்ள சீதோஷ்ண நிலை ஒத்துழைக்கவில்லை. கடும் முயற்சி செய்தும், நான்காமிடம் தான் பெற முடிந்தது. சென்னையில், நம் சொந்த மாநிலத்தில் நடந்த போட்டியில் தங்குமிடம், உணவு, உடல்நிலை சிறப்பாக இருந்தது. முந்தைய நாளே போட்டிக்கு தயாராகவும் முடிந்தது.
மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்ய நாகேஸ்வரி வெற்றிக்காக சொன்ன 'டிப்ஸ்'களை தவறாமல் கடைப்பிடித்தேன். காலை, மாலை தலா மூன்று மணி நேரம் வீதம் நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் சிரத்தையும் எடுத்துக் கொண்ட பயிற்சி, வெற்றியை சாத்தியமாக்கியது. 'டெக்னோ ஸ்போர்ட்ஸ்' சந்தீப் போட்டிகளுக்கு செல்லும் போது பயணம், உணவுப்படியை வழங்கி உதவுகிறார். பொருளாதார ரீதியாக உதவி கிடைப்பதால், மற்றவற்றை யோசிக்காமல் என்னால் வெற்றி பெற முடிந்தது.
வாய்ப்பைப் பயன்படுத்தினேன்
விஷ்ணு ஸ்ரீ கூறியதாவது:
முதன்முறையாக 'கேலோ இந்தியா' போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை, பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பொதுவாக ஓட்டங்களை போல் அல்லாமல், தடை தாண்டும் போட்டியை கவனமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கால், மூட்டுகளில் பிடிப்பு, வலி ஏற்படும். பயிற்சி, போட்டியின் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், காயம் ஏற்பட்டு விடும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
பயிற்சியாளர், அழகேசன் உத்வேகமாக வெற்றி பெறுவதற்கான விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். வெற்றி பெற்றவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கையில் சான்றிதழ் வாங்கி, பாராட்டு பெற்றது, மிகவும் மகிழ்ச்சி தருணமாக அமைந்தது.