Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்

தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்

தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்

தீபாவளிக்கு பின் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் துவங்கின! 27ம் தேதி முதல் முழுவீச்சில் இயங்க ஆயத்தம்

UPDATED : அக் 24, 2025 06:47 AMADDED : அக் 24, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், திருப்பூரில் சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நேற்று முதலே இயக்கத்தை துவக்கியுள்ளன. வரும் 27ம் தேதி முதல், முழு வீச்சில் அனைத்து நிறுவனங்களும் இயக்கத்துக்கு வருகின்றன.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், ரைசிங், எம்ப்ராய்டரி, செக்கிங், அயர்னிங் என ஆடை உற்பத்தி சங்கிலித்தொடரிலுள்ள ஜாப் ஒர்க் நிறுவனங்களில், தகுதிக்கு ஏற்ப, அலுவலக பணிகள் மற்றும் மெஷின் ஆபரேட்டர், ஹெல்பர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள்

கடந்த, 20ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்து, கடந்த 17ம் தேதி முதல் விடுமுறை அளித்தன. மதுரை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட வெளிமாவட்ட தொழிலாளர் பெரும்பாலானோர், சொந்த ஊர்களுக்கு சென்று, தீபாவளி கொண்டாடியுள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களை பொறுத்தவரை, திருப்பூரிலேயே தீபாவளி கொண்டாடினர்.

பணிக்கு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்

பண்டிகை முடிந்து மூன்று நாளான நிலையில், சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நேற்று முதலே இயக்கத்தை துவக்கியுள்ளன. ஒடிசா, ஜார்கண்ட், உ.பி., போன்ற சொந்த ஊர் செல்லாத, வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். குறைந்தளவு தொழிலாளரை கொண்டு ஆடை தயாரிப்பு பூர்த்தி செய்யமுடியாது. இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பவேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு, நிறுவனங்கள், படிப்படியான இயக்கத்தை துவக்கியுள்ளன.

பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்லவில்லை. போனஸ் தொகையை வீட்டுக்கு அனுப்பி விட்டு, இங்கேயே தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

தீபாவளிக்குப்பின், சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நேற்று முதலே மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. அந்நிறுவனங்களில், 30 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

பெரும்பாலான ஆடை உற்பத்தி மற்றும் நிட்டிங், சாய ஆலைகள் உள்பட அனைத்துவகை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் வரும் 27ம் தேதி முதல் இயக்கத்தை துவக்க திட்டமிட்டுள்ளன. வெளிமாவட்ட தொழிலாளர்கள், பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்து, வரும் 25, 26 ஆகிய தேதிகளில் அதிகளவில் திருப்பூர் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 14 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஜனநாயக கடமை ஆற்றிய பின்னரே, பீஹார் மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்பார்ப்புடன் ஏற்றுமதியாளர்கள்

அமெரிக்காவுக்கான ஆர்டர்கள் குறைந்தாலும்கூட, ஐரோப்பா போன்ற பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வசம் உள்ளன. சர்வதேச சந்தையில் நல்ல மாற்றங்கள் நிகழும், வரும் நாட்களில் அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடும், தொழிலாளர்களின் வருகையை எதிர்பார்த்து, தீபாவளிக்குப்பிறகு நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கியுள்ளன.

- பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us