Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசியல் அதிகாரத்துக்கு கீழ்படியாத மின் அதிகாரிகளின் துணிச்சலுக்கு...சபாஷ்!

 அரசியல் அதிகாரத்துக்கு கீழ்படியாத மின் அதிகாரிகளின் துணிச்சலுக்கு...சபாஷ்!

 அரசியல் அதிகாரத்துக்கு கீழ்படியாத மின் அதிகாரிகளின் துணிச்சலுக்கு...சபாஷ்!

 அரசியல் அதிகாரத்துக்கு கீழ்படியாத மின் அதிகாரிகளின் துணிச்சலுக்கு...சபாஷ்!

ADDED : டிச 05, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: திருப்பூர் மேயர் தினேஷ்குமார் வசிக்கும் வீட்டில், கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக, மின்வாரிய பறக்கும் படையினர், 42 ஆயிரத்து 571 ரூபாய் அபராதம் விதித்தனர்; அரசியல் அதிகாரத்துக்கு கீழ்படியாமல், ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கே அபராதம் விதித்த, மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகளின் துணிச்சலான செயல் பாராட்டு பெற்றுள்ளது.

திருப்பூர் மேயர் தினேஷ்குமார் (தி.மு.க.) வீடு, புதுக்காடு, கே.என்.பி. சுப்ரமணியன் நகரில் உள்ளது. வீட்டின் ஒரு பகுதியில், விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி, அவரது வீட்டில் ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய பறக்கும் படை உதவி செயற்பொறியாளர் மாதப்பன் தலைமையிலான அலுவலர்கள், கட்டுமானப்பணிக்கு மின் பயன்பாடு செய்யப்பட்டு வந்த விதத்தை ஆய்வு செய்தனர்.

இதில், வீட்டு பயன்பாடுக்குரிய மின் இணைப்பை, முறைகேடாக, கட்டட கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தியதாக, 42 ஆயிரத்து 571 ரூபாய் கூடுதல் கட்டணம் (விதிமீறலுக்கான அபராதம்) விதித்தனர்.

மேயர் செய்த தவறு மேயர் வீட்டின் ஒரு பகுதியை விரிவாக்கம் செய்யும் பணிக்காக, அவரது தாய் பார்வதி பெயரில் தற்காலிக மின் இணைப்பு வேண்டி, கடந்த, அக்., 8ம் தேதி மின்வாரியத்திற்கு விண்ணப்பம் வழங்குகின்றனர். 13ம் தேதி, அந்த விண்ணப்பம், மின்வாரியத்தினரால் பதிவு செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்படுகிறது. 16ம் தேதி, தற்காலிக மின் இணைப்பு கட்டணத்துக்கான தொகையாக, 16 ஆயிரத்து 935 ரூபாய், விண்ணப்பதாரர் பெயரில் செலுத்தப்படுகிறது. தொடர்ந்து, கட்டட விரிவாக்கப் பணி துவங்கி நடந்து வந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். 17ம் தேதி, தற்காலிக மின் இணைப்பு வேண்டி மேயரின் தாய் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும், வீட்டு பயன்பாட்டுக்குரிய மின் இணைப்பை முறைகேடாக கட்டட புனரமைப்பு கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தியது மேயர் தரப்பினர் செய்த தவறு; புகார், மின்வாரிய பறக்கும் படையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், அவர்கள் ஆய்வு செய்து, 42 ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் விதிக்கின்றனர்.

மக்கள் பெரும் வரவேற்பு ஆளும் கட்சி வி.ஐ.பி. என்று தெரிந்தாலும், விதிமுறை மீறலில் எத்தகைய சமரசமும் மேற்கொள்ளாமல் நடவடிக்கையில் இருந்து அதிகாரிகள் துளிகூட பிசகவில்லை. அதிகாரிகளின் துணிச்சலான இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அரசு அதிகாரிகள், அரசியல் அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடுவதும், நடவடிக்கை எடுத்தபின் அதிகார வர்க்கம் என்று தெரியவந்தால் நடவடிக்கையை முடக்குவதும் சமீப காலமாக நடக்கிறது.

ஆனால், நேர்மையுடன் நடவடிக்கை எடுத்தால், எத்தகைய அரசியல் தலையீடுகள் வந்தாலும் அவை தவிடுபொடியாகிவிடும் என்பதற்கு, இந்த நடவடிக்கை முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

'தெறி'க்க வைக்கும்பறக்கும் படை மின் திருட்டை தடுப்பதற்காக, மின்வாரியத்தில் செயல்படும் ஒரு பிரிவு, பறக்கும் படை. மின் திருட்டு மற்றும் மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்துவது, மின் இழப்பை குறைப்பது உட்பட பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

தனிப்பட்ட வீடு கட்டுமானம் அல்லது புனரமைப்பு பணி மேற்கொள்ளும் போது, வணிக பயன்பாட்டுக்குரிய இணைப்பை பெற்றுதான், கட்டுமானப்பணி மேற்கொள்ள வேண்டும்.இதில் நடக்கும் விதிமீறல் கண்டறியப்பட்டால், பறக்கும் படையினர் அபராதம் விதிப்பர். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின் திருட்டு, டிரான்ஸ்பார்மரில் 'கொக்கி' போட்டு மின் திருட்டில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை தடுப்பதும் இவர்கள் பணி.இத்தகைய மின் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், விதிமீறலில் ஈடுபட்ட நாள் துவங்கி, அதை கண்டறிந்து உறுதி செய்யப்பட்ட நாள் வரை கணக்கிட்டு, பெரும் தொகையை அபராதமாக விதிப்பர்; இந்த விதிமீறல் கிரிமினல் குற்றமாகவும் கருதப்படுகிறது.

அடையாளத்தைஅறிய முடியாது பறக்கும் படையில் உள்ள மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்களை அடையாளப்படுத்தி கொள்வதில்லை; தங்களின் நடவடிக்கை குறித்த எவ்வித தகவல்களையும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. குறிப்பாக, மின் திருட்டு உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் பெயர்களை ரகசியமாக வைக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us