/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு ;தொழிலாளருக்குப் பெரும் பயன்இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு ;தொழிலாளருக்குப் பெரும் பயன்
இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு ;தொழிலாளருக்குப் பெரும் பயன்
இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு ;தொழிலாளருக்குப் பெரும் பயன்
இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு ;தொழிலாளருக்குப் பெரும் பயன்
ADDED : பிப் 25, 2024 12:37 AM
திருப்பூர்:திருப்பூரில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை இன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம், தொழிலாளர்களுக்கு பெரும் பயன் கிடைக்கும்.
பின்னலாடை உட்பட பல்வேறு தொழில்களில், திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பூர், டவுன்ஹாலில், 2005ல் நடந்தஎம்.எல்.எப்., மாநாட்டில், முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி உள்ளிட்டோர், அப்போதைய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரசேகர ராவிடம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தியதால், பத்து ஆண்டுகள் மருத்துவமனை எங்கு வரப்போகிறது என்பதே தெரியாமல் இருந்தது.
பின், பூண்டி - பூலுவப்பட்டி ரிங்ரோடு, செட்டிபாளையத்தில், 6.2 ஏக்கர் இடம் மட்டும் தேர்வு செய்து, சுற்றுச்சுவர் மட்டும் கட்டியிருந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பின், இரண்டு ஆண்டுகள் மந்தமாக நடந்த பணி, 2023ல் நிறைவு பெற்றது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று திறக்கப்பட உள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்துக்கு (இ.எஸ்.ஐ.,), திருப்பூரை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மூலம் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் நிதி செலுத்தப்படுகிறது. தேவையான மருத்துவ சிகிச்சை, தொழிலாளர் பயன்பெற, 100 படுக்கைகளுடன் மருத்துவமனை அமைகிறது. தற்போதைக்கு, கோவை, சிங்காநல்லுார் சென்று சிகிச்சை பெறும், நோயாளிகள், இங்கேயே இ.எஸ்.ஐ., மூலம் சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இங்குள்ள இ.எஸ்.ஐ., யில் என்னென்ன மருத்துவ சிகிச்சை கிடைக்க பெறுகிறது என்பது குறித்த பனியன் நிறுவனங்களில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.