Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்? மறந்து போன தி.மு.க. வாக்குறுதி

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்? மறந்து போன தி.மு.க. வாக்குறுதி

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்? மறந்து போன தி.மு.க. வாக்குறுதி

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்? மறந்து போன தி.மு.க. வாக்குறுதி

ADDED : அக் 14, 2025 12:15 AM


Google News
உடுமலை:தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்டசபையில் சிறப்பு சட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசு, 2012ல், அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர் சயின்ஸ், தையல், இசை தோட்டக்கலை, கட்டடக்கலை வாழ்க்கைக்கல்வி பாடங்களை கற்பிக்க பகுதி நேர ஆசிரியர்களை நியமித்தது.

இதுவரை பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாமல், மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த, 2012ல், 16 ஆயிரத்து 549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டார்கள். சம்பள உயர்வு பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு, ரூ.10 ஆயிரம் சம்பளம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

இவர்களில் இதுவரை மரணம், பணி ஓய்வு என சுமார் 5 ஆயிரம் பேர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது; 12 ஆயிரம் பேர் வரை தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.

இவர்களில் உடற்கல்வி மற்றும் ஓவியம் தலா 3,700 பேரும்,கம்ப்யூட்டர் சயின்ஸ் 1700; தையல், 300; இசை, 200 பேர் என பகுதிநேர ஆசிரியர்களாக இருந்து கற்பித்து வருகின்றார்கள்.

2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

பணி நிரந்தரம் செய்யவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே சம்பள உயர்வு, 2,500 ரூபாய் மட்டும் கடந்த 2024ல் வழங்கப்பட்டது.

சம்பள உயர்வு வழங்கினாலும், தி.மு.க., ஆட்சியிலும் மே மாதம் சம்பளம், போனஸ், தீபாவளி பண்டிகை கடன், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்ற ஒரு குறை, பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த காலத்தில், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு, குடும்பத்தை நடத்த முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரே கல்வி தகுதியுடைய, ஒரே பாட ஆசிரியர்களுக்கு, சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கோர்ட் உத்தரவை அமல்படுத்த, பல முறை அரசுக்கு வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், சிறப்பு சட்டம் தாக்கல் செய்து முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழகத்திலுள்ள பிற கட்சிகளின் ஆதரவையும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us