Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அடுத்த தலைமுறைக்கு உதவ பனை விதை நடவு அவசியம்

அடுத்த தலைமுறைக்கு உதவ பனை விதை நடவு அவசியம்

அடுத்த தலைமுறைக்கு உதவ பனை விதை நடவு அவசியம்

அடுத்த தலைமுறைக்கு உதவ பனை விதை நடவு அவசியம்

ADDED : அக் 18, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
பனைமரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் விதமாக மாவட்ட, வட்டார அளவில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயன்மிகுந்த பனையின் நன்மை கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் சேவையில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், நம்மிடம் பகிர்ந்தவை:

தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான பனைமரங்கள், அதிகப்படியாக நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகின்றன. அதில் 90 சதவீத மரங்கள் பணத்திற்காக அழிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு பனைகளின் பலன் கருதி 6 கோடி பனைவிதைகள் நட வேண்டும் என்று அரசு அறிவித்ததால் எல்லோரும் பனைமீது ஆர்வம் காட்டி பனை விதை நட முன்வருகின்றனர். இதை அரசு முன்பே சொல்லியிருக்க வேண்டும். ஜூன் மாதம் உத்தரவிட்டு ஜூலையில் விதைக்கும் பணி தொடங்கியிருந்தால் பனைகளுக்கு நல்ல மழை கிடைத்து, இன்னும் எளிதாக வளர்ந்திருக்கும். கலெக்டர், தாலுக்கா அதிகாரிகள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து ஒன்றுபட செயல்பட்டால் மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

100 சதவீதம்

மரமாகாது

நாங்கள், கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் 9 வருடங்களாக குளம், குட்டை போன்ற இடங்களில் பனை விதைகள் நட்டு வருகிறோம். இதுவரை 5 லட்சம் பனைவிதைகள் நட்டுள்ளோம். அவை, 100 சதவீதம் மரமாவதில்லை. சரியான மழையின்மை முக்கியக் காரணம். இருப்பினும் விடாமல் முயற்சித்து வருகிறோம். நாங்கள் விதைத்த விதைகளில் 70 சதவீதத்திற்கும் மேலானவை முளைத்திருக்கின்றன.

இன்று நாம் விதைக்கும் பனை, நன்கு வளர 30 ஆண்டுகள் ஆகும். அடுத்த தலைமுறையினருக்கு பெரிதும் உதவக்கூடியது. அதற்காக எல்லோரும் விரைவாக பனை நட வேண்டும். இயற்கையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் ஆற்றல் பனைமரத்தின் வேரில் உள்ளது. நீர்நிலைகளில் மண் அரிப்பைத் தடுக்கிறது. உண்பதற்கு நுங்கு, பனம்பழம், கிழங்கு, பதநீர், கருப்பட்டி, கற்கண்டு போன்ற உணவுகளைக் கொடுக்கிறது. மருத்துவ குணம் நிறைந்தது. கைவினைப்பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் பனை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும், பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.

பொது இடங்களே சிறந்தவை பனைவிதைகளை பட்டா பூமியில் அல்லாமல் பொது இடங்களில் விதைப்பதே சிறந்தது. தனிநபர் இடங்களில் விதைத்தால் ஆக்கிரமிப்பு நோக்கில் அது வெட்டப்படும் அபாயம் உள்ளது. பொது இடங்களில் நடும்போது, வெட்டுவதற்கு தடை இருப்பதால் மரம் காப்பாற்றப்படும். பல பயன்களை கொடுக்கும் பனை, வியாபார நோக்கங்களால், ஆக்கிரமிப்பு காரணங்களால் வெட்டப்படுகிறது. இதற்குத் தடை விதித்திருப்பது பனைகளைக் காக்க உதவுகிறது. தேவையில்லாமல் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழலும் நன்மை அடையும். - சம்பத்குமார், ஒருங்கிணைப்பாளர், கிராமிய மக்கள் இயக்கம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us