/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாரச்சந்தை மேம்பாட்டில் அதிகாரிகள் அலட்சியம் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை வாரச்சந்தை மேம்பாட்டில் அதிகாரிகள் அலட்சியம் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை
வாரச்சந்தை மேம்பாட்டில் அதிகாரிகள் அலட்சியம் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை
வாரச்சந்தை மேம்பாட்டில் அதிகாரிகள் அலட்சியம் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை
வாரச்சந்தை மேம்பாட்டில் அதிகாரிகள் அலட்சியம் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை
ADDED : அக் 20, 2025 10:07 PM
உடுமலை: உடுமலை கிராமங்களிலுள்ள வாரச்சந்தை வளாகங்கள் மேம்பாட்டை ஒன்றிய நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை; பயன்படுத்த முடியாத நிலையில் சந்தை வளாகங்கள் உள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், விளைவிக்கப்படும் பொருட்களை அப்பகுதியிலேயே விற்பனை செய்ய, அந்தந்த பகுதிகளில், வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.காய்கறிகள் மட்டுமல்லாது விவசாயம் சார்ந்த பொருட்களும் அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதிக மக்கள் வருகை உள்ளிட்ட காரணங்களால், பராமரிப்பு மற்றும் மேம்பாடு செய்ய, சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் சந்தைகள் கொண்டு வரப்பட்டன.
உடுமலை ஒன்றியத்தில் வாளவாடி; குடிமங்கலம் ஒன்றியத்தில் பூளவாடி, ராமச்சந்திராபுரம்; மடத்துக்குளம், காரத்தொழுவு ஆகிய இடங்களில் வாரச்சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதில், பூளவாடி வாரச்சந்தை மட்டும் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு, புதிதாக கடைகள் கட்டப்பட்டன. பெதப்பம்பட்டியிலும், சிறப்பு திட்டத்தின் கீழ் கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
வாளவாடி சந்தை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. போதிய இடவசதி இருந்தும், எவ்வித திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. உடுமலை ஒன்றிய நிர்வாகம், சந்தை வளாகத்தை முறையாக பராமரித்து, புதிதாக கடைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ராமச்சந்திராபுரம் வாரச்சந்தை, பயன்படுத்த முடியாத நிலையில், குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
மடத்துக்குளத்திலுள்ள சந்தையை, ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போதிய இடவசதி இல்லாமல், வாரச்சந்தை நாளன்று தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடைகள் அமைக்கும் நிலை உள்ளது. நீண்ட காலமாக சந்தை கடைகளுக்கான கட்டமைப்பும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. காரத்தொழுவிலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, ஆபத்தான முறையில், சந்தை செயல்படுகிறது.
உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சந்தைகளின் நிலை பரிதாபமாக மாறியுள்ளதால், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சந்தையை பயன்படுத்தும், விவசாயிகள், நுகர்வோர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரமான முறையில், காய்கறி விற்பனை செய்யும் வகையில், புதிதாக கடைகள் கட்ட வேண்டும். மேலும், அதே வளாகத்தில், காய்கறி மற்றும் தானியங்கள் இருப்பு வைப்பதற்கான குடோன்களை ஏற்படுத்தலாம்.
வாரச்சந்தைகள் முறையாக செயல்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும். விவசாயிகளும் நேரடியாக தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியும். ஒன்றிய நிர்வாகங்கள் நீண்ட காலமாக வாரச்சந்தை பராமரிப்பில் அலட்சியம் காட்டுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


