Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை

ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை

ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை

ஒலிக்கும் சலங்கை; பறக்கும் பந்து; பார்வையற்றோர் மாநில கிரிக்கெட் அணி தேர்வு; மாணவர்களுக்கு ஊட்டுகிறது தன்னம்பிக்கை

ADDED : அக் 03, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: சலங்கை நிரப்பப்பட்ட பந்தின் 'சலசல' சத்தத்தை வைத்து, பேட்டைச் சுழற்றியடிக்கின்றனர் வீரர்கள்; துல்லியமாக ஸ்டெம்பை குறிவைத்து வீசுகின்றனர் பந்துவீச்சாளர்கள்; திருப்பூரில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு, விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது; மாணவ, மாணவியருக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

திருப்பூர், கணியாம்பூண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், பார்வையற்றோருக்கான தமிழக கிரிக்கெட் அணிக்கான தேர்வு நடந்து வருகிறது.

முழுவதும் பார்வையிழந்தோர், பகுதி பார்வையிழந்தோர் மற்றும் பகுதிக்கு மேல் பார்வையிழந்தோர் என, 3 பிரிவுகளில், 33 வீரர்கள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.

போட்டியை துவக்கிவைத்த ரோட்டரி கவர்னர் தனசேகர், பார்வையற்ற வீரர்களிடம், புரூஸ்லியை குறிப்பிட்டு பேசினார். அப்போது, பார்வையற்ற கிரிக்கெட் வீரர் பாண்டியன், '10 ஆயிரம் அடிமுறைகளை ஒரு தடவை பயிற்சி செய்தவனை பார்த்து நான் அஞ்சவில்லை. ஆனால், ஒரு அடிமுறையை, 10 ஆயிரம் தடவை பயிற்சி செய்தவனை பார்த்து நான் அஞ்சினேன்' என்ற புரூஸ்லி கூறிய வார்த்தைகளை சுட்டிக்காட்டியதோடு, 'குறிப்பிட்ட ஒரு துறையில் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது, வெற்றி நிச்சயம்' என்றும் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து பார்வையற்ற வீரர்கள் களமிறங்கினர். கிரிக்கெட் விளையாட்டில், 'சல,சல' வென ஒலி எழுப்பும் சலங்கை நிரப்பப்பட்ட பந்து தான் பயன்படுத்தப்படுகிறது. பார்வை குறைபாடுள்ள போதும், துல்லியமாக ஸ்டம்ப்பை குறி வைத்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசினர். பந்து வரும் திசையை, அதன் சத்தத்தை வைத்து கணித்து, பவுண்டரியை நோக்கி பேட்ஸ்மேன்கள் விளாசினர்.

முக்கியத்துவம் வேண்டும்



கடந்த, 2009 முதல் சங்கம் இயங்கி வருகிறது. மாநிலம் முழுக்க, 200 பார்வை குறைபாடுள்ள கிரிக்கெட் வீரர்கள், 12 அணிகளாக பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்களில், 45 பேர், 3 அணிகளாக உள்ளனர். தங்கள் குறைபாடுகளை மறந்து, விளையாட்டின் விதிமுறையை உள்வாங்கி விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்; திறமையை வெளிக் காட்டுகின்றனர். தேசிய அளவில் சாதிப்போருக்கு வேலை வாய்ப்பும் சாத்தியமாகிறது; அவர்களது எதிர்காலம் பிரகாசிக்கிறது. இருப்பினும், இந்த விளையாட்டுக்கு தொழில் ரீதியான முக்கியத்துவம், தொடர் பயிற்சிக்கான வாய்ப்பு இல்லை. போட்டியில் பங்கேற்போர், 2, 3 வாரம் மட்டுமே பயிற்சி பெற்று பங்கேற்கின்றனர். தொழில் ரீதியான முக்கியத்துவம், தொடர் பயிற்சி, தேவையான வசதி, வாய்ப்பு இருந்தால் மேலும் சாதிப்பர்.

- மகேந்திரன், மாநில பொதுச்செயலர்,தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம்.

நட்பு வட்டம் விரிகிறது


நான் மதுரையில் வசிக்கிறேன்; போட்டி தேர்வு வாயிலாக, வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறேன். 10 ஆண்டாக கிரிக்கெட் விளையாடுகிறேன். பல இடங்களுக்கு சென்று விளையாடுவதன் வாயிலாக திறமை வளர்வதுடன், நட்பு வட்டம் விரிவடைகிறது; இது, எங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். கிரிக்கெட் விளையாடுவதன் வாயிலாக, எனக்குள்ள குறையை மறந்து போகிறேன். அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகள் நிரம்பிக்கிடக்கின்றன. நமக்கு எது நன்றாக தெரியுமோ, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது, சாதிக்க முடியும்.- தினேஷ், 32, கிரிக்கெட் வீரர்

உதவியால் கிடைக்கும் நம்பிக்'கை'

நான் கன்னியாகுமரியை சேர்ந்தவன்; விழுப்புரத்தில் தபால் துறையில் பணிபுரிகிறேன். விளையாடும் போது, சுற்றியிருப்பவர்கள் அளிக்கும் ஊக்குவிப்பு, எனக்குள்ள குறையை மறக்க செய்கிறது. எங்களுக்கு ரோட்டரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தேவையான உதவிகளை செய்வதன் வாயிலாக தான் இதுபோன்று வெளியிடங்களுக்கு சென்று விளையாட முடிகிறது. இத்தகைய உதவியால் தன்னம்பிக்கை பெறுகிறோம். எங்களது சீனியர் வீரர்கள் பலர் தேசிய அளவில் விளையாடி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை பெறும் போது, மற்றவர்களும் உற்சாகம் பெறுகின்றனர். நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றனர்.

- வெங்கடேஷ், கிரிக்கெட் வீரர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us