/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசி கோவிலில் பாழாகும் 'நட்சத்திர பூங்கா' அவிநாசி கோவிலில் பாழாகும் 'நட்சத்திர பூங்கா'
அவிநாசி கோவிலில் பாழாகும் 'நட்சத்திர பூங்கா'
அவிநாசி கோவிலில் பாழாகும் 'நட்சத்திர பூங்கா'
அவிநாசி கோவிலில் பாழாகும் 'நட்சத்திர பூங்கா'
ADDED : அக் 21, 2025 11:00 PM

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின், நட்சத்திர நந்தவனப் பூங்கா பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் தெற்கு பகுதியில் நட்சத்திர நந்தவனப் பூங்கா உள்ளது. பூங்காவில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், ராசிகளுக்கும் பொருத்தமான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பில் இருந்தது. இதுதவிர சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், நடைபாதை ஆகியவற்றை, திருப்பூரை சேர்ந்த 'ஜி.யு.எஸ்.' பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைத்து கொடுத்திருந்தது.
ஓரிரு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்த இந்த நட்சத்திர பூங்கா, தற்போது கோவிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி விட்டது. இதுதவிர, சிறுவர்கள் விளையாடுவதற்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி உடைந்து காணப்படுகிறது. பூங்காவில் நடப்பட்ட மூலிகை செடிகளுக்கு மத்தியில் முதியவர்கள் மற்றும் பக்தர்கள் நடப்பதற்காக நடைபாதை, புதர்கள் முளைத்து மிக மோசமான நிலையில் உள்ளது.
இதுதவிர, நட்சத்திரம், ராசி பற்றிய செய்திகள் அடங்கிய கல்வெட்டுகள் சேதமடைந்து விட்டது. புதர்கள், களைச் செடிகள் என பூங்காவை சுற்றிலும் வளர்ந்துள்ளது. இதனால், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பூங்காவிற்கு குழந்தைகளை அனுப்ப பக்தர்கள் தயங்குகின்றனர்.
ஒரு சில சமயங்களில் சுவாமி தரிசனம் செய்வதாக கூறி வரும் பக்தர்கள் பூங்காவில் சிலர் படுத்து உறங்கி வருகின்றனர். தமிழகம் மட்டும் இல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்யும் கோவிலாக விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு நன்கொடை வழங்கவும், பல வகையில் நிதி உதவிகள் பெற்று கோவிலின் தொன்மையை பாதுகாக்கவும் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் பெரிதும் அரும்பாடு படுகின்றனர்.
ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அதனை முறையாக பயன்படுத்தாமல், பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடுவதால் பக்தர்களும், உபயதாரர்களும் வேதனைப்படுகின்றனர். எனவே, இனி வரும் காலங்களிலாவது அறநிலையத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக நடைபெறும் ஆக்கப்பூர்வமான பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், பாதுகாக்கவும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


