Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழை உணர்த்தும் அருகாமைப்பள்ளியின் அவசியம்

மழை உணர்த்தும் அருகாமைப்பள்ளியின் அவசியம்

மழை உணர்த்தும் அருகாமைப்பள்ளியின் அவசியம்

மழை உணர்த்தும் அருகாமைப்பள்ளியின் அவசியம்

ADDED : அக் 23, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரித்த போதும், திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காலை, 6:00 மணி முதல், மழை பெய்யத் துவங்கியது; காலை, 8:00 மணிக்கு, கலெக்டர், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார்.அதற்குள்ளாக தனியார் பள்ளிகளில் இருந்து, பஸ்கள், மாணவர்களை அழைத்து வர கிளம்பியிருந்தன; மாணவர்கள் பலர், சீருடை சகிதமாக தயாராகி அமர்ந்திருக்க, விடுமுறை அறிவிப்பு வெளிவந்த நிலையில், விடுமுறை உற்சாகத்துக்கு சென்று விட்டனர். பெற்றோர் சிலர், பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்றிருந்த நிலையில், பாதி வழியில் திரும்பி வரும் நிகழ்வும் நடந்திருந்தது.

பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் நிர்வாகியும், கல்வியாளருமான மனோகரன் கூறியதாவது:

'ஒரு கி.மீ.,க்குள் ஆரம்பப்பள்ளி, 3 கி.மீ.,க்குள் நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ.,க்குள் உயர்நிலைப்பள்ளி, 8 கி.மீ.,க்குள் மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும்; அந்தந்த எல்லைக்குள் உள்ள மாணவ, மாணவியர் நடந்து சென்று கல்வி கற்க வேண்டும்' என்பது தான் அருகாமை பள்ளி கட்டமைப்பு. தமிழக அரசின் கல்விமுறையும், இந்த அடிப்படையில் தான் இருக்கிறது.

இந்த நடைமுறைப்படி, பள்ளிக்கு செல்லும் தொலைவு, 3 முதல், 8 கி.மீ., மட்டுமே; அவசர கதியில் கிளம்பாமல் பொறுமையுடன் கிளம்பி செல்ல முடியும். காலை, 8:00 மணிக்கு மழைக்கால விடுமுறை அறிவித்தால் கூட மாணவர்களோ, பெற்றோரோ, பள்ளி நிர்வாகத்தினரோ எவ்வித பதட்டமும் அடையத் தேவையில்லை; அவர்களின் இயல்பு பணி எந்த வகையிலும் பாதிக்காது.

தற்போது, 25 கி.மீ., துாரம் கூட பள்ளி பஸ்களை இயக்கி மாணவ, மாணவியர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதனால், காலை, 6:00 முதல், 7:00 மணிக்கெல்லாம் மாணவ, மாணவியர் தயாராக வேண்டியிருக்கிறது; முழுமையான துாக்கம் தொலைத்து, காலை உணவு தவிர்த்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். உடல் மற்றும் மனம் சார்ந்த முழுமையான கல்வியை அவர்களால் பெற முடிகிறதா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு, அவர் கூறினார்.--

மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், வேலைக்கு செல்லும் பெற்றோரின் இயல்பு பணி, ஸ்தம்பிக்கிறது. எனவே, வானிலை அறிவிப்புக்கேற்ப, முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும். அல்லது, பள்ளிகளை இயக்க வேண்டும். - அபிநயா, உளவியல் ஆலோசகர்.


நடவடிக்கை பாய்வதில்லை மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருப்பினும், திருப்பூரில் உள்ள சில தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை செயல்பட்டன. விடுமுறை அறிவித்தும் பள்ளி நிர்வாகம் செயல்பட்டால் நடவடிக்கை பாயும் என்று கல்வித்துறை கூறினாலும், அது நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. காரணம் கேட்டால், இதுதொடர்பாக எழுத்துபூர்வ புகார் வருவதில்லை என்று கூறுகின்றனர் கல்வித்துறையினர். இதனால், விடுமுறையிலும் பள்ளி செயல்பாடு தொடர்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us