உழவர் சந்தையில் என்ன தான் பிரச்னை?
உழவர் சந்தையில் என்ன தான் பிரச்னை?
உழவர் சந்தையில் என்ன தான் பிரச்னை?
ADDED : பிப் 02, 2024 12:56 AM

திருப்பூர்:''திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் நாங்கள் காய்கறி விற்கும் நேரத்தில், வியாபாரிகள் கடை அமைக்கின்றனர். எங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது'' என விவசாயிகளும், ''நாங்கள் விற்கும் இடத்துக்கும் சந்தைக்கும் நீண்ட இடைவெளி உள்ளது.
இந்த விற்பனை தற்போது துவங்கியுள்ளதல்ல, பல ஆண்டுகளாக உள்ளது'' என வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
விற்காததால் கவலை
ரமேஷ், திருப்பூர் மாநகர செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்:
உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் ரோட்டோர கடை செயல்பட அனுமதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சிரமப்பட்டு பயிர் செய்து காப்பாற்றி, சந்தைக்கு விளை பொருட்களை கொண்டு வரும் போது, விற்கவில்லை என்று மனம் கவலை அடைகிறது.
நாங்கள் அதிகாலையில் தான் விற்க முடியும். அதன் பின், தோட்டத்து வேலையை பார்க்க செல்ல வேண்டும். எனவே, நேர வரையறை விஷயத்தில் தெளிவான முடிவெடுக்க வேண்டும். முடிவெடுக்கவில்லையெனில்மீண்டும் போராட்டம் நடத்துவோம்.
மகாலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்:
விற்பனைக்கு வியாபாரிகளுக்கு நிறைய வழிகள் உண்டு. விவசாயிகள் உற்பத்தி பொருட்களை நேரடியாக சந்தையில் மட்டுமே விற்க முடியும்.
அவர்களின் வாழ்வதாரம் சந்தையை நம்பியே உள்ளது. வெளியே கடை அமைத்து வியாபாரிகள் இடையூறு செய்வதால், தேக்கமாகும் பொருட்களை கேட்கும் விலை கடைசி நேரத்தில் விற்க வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில், விவசாயிகள் நிலையை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
எங்களால் என்ன பிரச்னை?
பாலு, பழம் வியாபாரி:
சந்தைக்கு வெளியே, பல்லடம் ரோட்டில் தான் நாங்கள் கடை வைத்துள்ளோம். பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடை உள்ளது. எங்களால் விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லை.
அவர்களை தேடி செல்வோர் செல்கின்றனர். நாங்கள் மொத்தமாக வெளியில் இருந்து வாங்கி விற்பதால், எங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு விற்கிறோம்.
சுப்ரமணி, காய்கறி, பழம், கீரை வியாபாரி:
ரோட்டோர கடை என்றாலும், கடைகளுக்கு வாடகை செலுத்தி, பொருட்களை வாங்கி இருப்பு வைத்து விற்கிறோம். எங்களால் போக்குவரத்துக்கும், உழவர் சந்தைக்கும் இடையூறு இல்லை. ஒரே கடையில் அனைத்து காய்கறிகளும் கிடைப்பதால்,எங்களை தேடி வாடிக்கையாளர் வருகின்றனர்.
அரசாணை விதிகளுக்கு உட்பட்டு, சந்தையில் இருந்து, 150 மீ., தள்ளித்தான் எங்களது கடைகள் உள்ளது. எங்களுக்கு விற்பனை நடக்க போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் இடையூறு செய்யக்கூடாது.
பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு
உழவர் சந்தை நேரத்தில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகள் இணைந்து, சந்தை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, உழவர் சந்தை விவசாயிகள், ரோட்டோர வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை, திருப்பூர்சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சப்கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழவர் சந்தையில் அடையாள அட்டை பெற்ற விவசாயிகள், ரோட்டோர வியாபாரிகள், போலீசார், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
'திருப்பூர் வடக்கு, தெற்கு உழவர் சந்தை நேரத்தில், ரோட்டோர வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்கின்றனர். இதனால், உழவர் சந்தைக்குள் பொதுமக்கள் வருகை குறைந்து, விவசாயிகளுக்கு வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. சந்தை நேரத்தில், ரோட்டோரம் காய்கறி விற்பனை செய்வதை தடுக்கவேண்டும்' என, விவசாயிகள் தரப்பினர் தெரிவித்தனர். துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, சப்கலெக்டர் தெரிவித்தார்.


