ADDED : பிப் 02, 2024 12:55 AM

திருப்பூர்;மத்திய இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது;இதுதொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினரின் கருத்துகள்:
தென்னிந்திய பனியன் உற்பத்தியா ளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:
ஏழு லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடர்கிறது. 2024 - 25 நிதியாண்டில், 2 கோடி குடும்பங்களுக்கு புதிய விடு கட்டித்தருதல். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம், பெண் முதலீட்டாளர்களை உருவாக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு கடனுதவி வழங்க 1 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஏற்படுத்தப்படுவது உள்ளிட்ட பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் பாராட்டத்தக்கவகையில் உள்ளது.
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி:
நாடுமுழுவதும் 1.4 கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதற்காக, மூவாயிரம் ஐ.டி.ஐ., அமைப்பது; பெண் தொழில்முனைவோரை உருவாக்க முத்ரா யோஜனா திட்டத்தில், 30 கோடி புதிய கடன் அளிப்பது பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள். ஜவுளி தொழில் சார்ந்த புதிய அறிவிப்புகள் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்:
நாட்டில், விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு வழங்கும் மிக முக்கியமானதாக உள்ளது ஜவுளி உற்பத்தி துறை. பல்வேறு பிரச்னைகளால், ஜவுளித்துறை சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகின்றன. பின்னலாடை துறைக்கு தனி வாரியம் ஏற்படுத்தவேண்டும் என்பது, நீண்டகால கோரிக்கை. ஆனால், ஜவுளித்துறைக்கான சிறப்பு அறிவிப்புகள் ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறாதது கவலை அளிக்கிறது.
மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது, தமிழகத்தை பொறுத்தவரை, இலவசங்கள் வழங்குவதற்காகவே பயன்படுத்தப்படும். அதற்குபதில், ஜவுளித்துறை சார்ந்த தொலைநோக்கு திட்டங்களை வகுத்து, நிதி ஒதுக்கீடு செய்திருக்கலாம்.
தென்னிந்திய அட்டைபெட்டி உற்பத்தியாளர் சங்க கோவை மண்டல தலைவர் சிவக்குமார்:
அட்டைப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்களான கிராப்ட் காகிதம், கிலோவுக்கு 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்து மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துவிட்டன. நெருக்கடியான இந்த சூழலில், ஜவுளித்துறை சார்ந்த பிரத்யேக அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.


