Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பழங்கால கோவில்கள் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்படுமா? திட்ட அறிக்கையை சமர்ப்பித்தும் காத்திருப்பு

பழங்கால கோவில்கள் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்படுமா? திட்ட அறிக்கையை சமர்ப்பித்தும் காத்திருப்பு

பழங்கால கோவில்கள் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்படுமா? திட்ட அறிக்கையை சமர்ப்பித்தும் காத்திருப்பு

பழங்கால கோவில்கள் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்படுமா? திட்ட அறிக்கையை சமர்ப்பித்தும் காத்திருப்பு

ADDED : அக் 10, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள பழமையான கோவில்கள் புனரமைப்புக்கு திட்ட அறிக்கை சமர்ப்பித்து, ஓராண்டாகியும், அரசு நிதி ஒதுக்கீடு செய்யததால், பணிகள் துவங்கவில்லை; ஹிந்து அறநிலையத்துறையினர் கவனம் செலுத்தி, பழங்கால கோவில் புனரமைப்பு பணிகளை துவக்க பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், அமராவதி ஆற்றுப்படுகை மற்றும் உப்பாறு படுகையில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில்கள் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், கும்பாபிேஷகமும் நடத்தப்படாமல் உள்ளது.

இத்தகைய கோவில்களை புனரமைக்க, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தொன்மை மற்றும் இதர விபரங்களை சேகரித்து, பழமை மாறாமல், புனரமைக்கும் திட்டத்தின் கீழ், இக்கோவில்கள் சேர்க்கப்பட்டன.

பின்னர், ஹிந்து அறநிலையத்துறை, தொல்லியல்துறை, ஸ்தபதி, ஓய்வு பெற்ற பொறியாளர் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட கோவில்களில் ஆய்வு செய்தனர்.

பின்னர் திட்ட கருத்துரு தயாரிக்கப்பட்டு, ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கீடு கோரி கடந்தாண்டு அக்., மாதத்தில், அனுப்பி வைக்கப்பட்டது.

பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் தரப்பட்ட நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யாததால் அடுத்த கட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. உதாரணமாக, உடுமலை கொங்கலக்குறிச்சி கிராமம் செல்லாண்டியம்மன் கோவிலில், திருப்பணிகளை மேற்கொள்ள, அரசு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் பணிகள் துவங்கவில்லை.

கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளிட்ட பல பழமையான கோவில்களில், திருப்பணி செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டாகியும் எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கும்பாபிேஷகம் நடத்தணும் இது குறித்து பக்தர்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: நீண்ட இடைவெளிக்கு பிறகு, பழங்கால கோவில்களை பழமை மாறாமல், புனரமைக்கும்திட்டத்தை தமிழக அரசு ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில், உடுமலை சுற்றுப்பகுதிகளில் மட்டும், 30க்கும் அதிகமான பழங்கால கோவில்கள், புனரமைக்கப்படாமல் உள்ளது.

இதில், கடந்தாண்டு, 10க்கும் மேற்பட்ட கோவில்களில் பணி மேற்கொள்ள, ஹிந்து அறநிலையத்துறை வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியும், பணிகள் துவங்காமல் உள்ளது.

இக்கோவில்கள் சிதிலமடைந்து, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபங்கள் பரிதாப நிலையில் உள்ளன. பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளுக்கு, ஒப்புதல் பெறவே நீண்ட காலமானது.

விரைவில், திருப்பணிகளை துவங்காவிட்டால், அக்கோவில்கள் பாதிக்கப்படும். எனவே, கடந்தாண்டு அனுப்பிய பட்டியல் அடிப்படையில், பழங்கால கோவில்களை புனரமைக்கவும், கும்பாபிேஷகம் நடத்தவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்க வேண்டும்.

தற்போது திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வரும் இதர கோவில்களிலும், விரைவில் பணிகளை நிறைவு செய்து கும்பாபிேஷகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us