ADDED : ஜூன் 08, 2024 04:57 AM

செஞ்சி, : நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, வல்லத்தில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வல்லம் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்தவற்கு ஜாப் கார்டு வழங்காமல் காலம் கடத்துவதாக கூறி நேற்று காலை 11:00 மணிக்கு 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் ஒன்றிய அலுவலகம் எதிரே சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 11:20 மணிக்கு மறியலை கைவிடச் செய்தனர்.
பின், ஒன்றிய அலுவலகம் உள்ளே சென்ற மாற்று திறனாளிகள், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பி.டி.ஓ., ஆனந்ததாஸ் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஜாப் கார்டு வழங்கப் படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.