/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்வெர்ட் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு கல்வெர்ட் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
கல்வெர்ட் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
கல்வெர்ட் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
கல்வெர்ட் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
ADDED : ஜூன் 22, 2025 12:51 AM

விழுப்புரம் : விழுப்புரம் - அனிச்சம்பாளையம் மெயின்ரோட்டில் கனரக வாகனம் மோதியதில், வாய்க்கால் கல்வெர்ட் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த அனிச்சம்பளையம் கிராமத்திற்கு, விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு கம்பன் நகர் பகுதியிலிருந்து மெயின்ரோடு செல்கிறது. அந்த கிராம தார் சாலையில் மீன் மார்க்கெட் பகுதி அருகே செல்லும் கோலியனுாரான் வாய்க்கால் மீது சிறிய கல்வெர்ட் உள்ளது.
இந்த சாலை வழியாக தினசரி அரசு பஸ்கள், லாரிகள், கார் உள்ளிட்ட வாகனங்கள், மணல், கட்டுமான பொருட்களை ஏற்றிய கனரக டிப்பர் லாரிகளும் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த சாலை மற்றும் கல்வெர்ட் நீண்டகாலமாக புதுப்பிக்காமல் மண் சாலை போல் இருந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த வழியாக சென்ற கனரக வாகனம், அந்த கல்வெர்ட் பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதியதோடு, பாரம் தாங்காமல் சாலையோடு கல்வெர்ட் உள்பகுதியும் உடைந்து பாதியளவு உள் வாங்கியது.
கல்வெர்ட் இடிந்ததால் மோதிய வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை அப்பகுதியிலிருந்து வந்த கிராம மக்கள் கல்வெர்ட் உடைந்து கிடப்பதை பார்த்து, போலீசுக்கு தகவல் அளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் நேரில் வந்து விசாரித்தனர்.
கல்வெர்ட் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, விழுப்புரத்திலிருந்து அனிச்சம்பாளையம், எம்.குச்சிப்பளையம் மற்றும் வழியில் உள்ள இளங்கோ நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள், வாகனங்களில் வந்து செல்ல வழியின்றி தவித்தனர். தினசரி பஸ்களும் நிறுத்தப்பட்டதால், பொது மக்கள், மாணவர்கள் அவதிப்பட்டனர். கல்வெர்ட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.