Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆதார் சிறப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை தேவை

ஆதார் சிறப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை தேவை

ஆதார் சிறப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை தேவை

ஆதார் சிறப்பு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை தேவை

ADDED : ஜூன் 26, 2024 03:43 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிக்காக மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோருடன் குவிவதால் ஆதார் மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன் காலதாமதம் ஆகிறது.ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்காக மாணவர்கள்...

விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளியில் திறக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வருவதால், அதற்காக சான்றிதழ்கள், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைப் பெற பெற்றோர்கள் இ-சேவை மையங்களை நாடுகின்றனர்.

இதனால், இ-சேவை மையங்களில் இந்தமாத தொடக்கத்தில் இருந்து கூட்டம் நிரம்பி வழிகிறது.

தனியார் இ-சேவை மையங்கள் ஏராளமாக உள்ளதால், அந்த இடங்களில் சான்றிதழ் போன்றவை எடுத்து வருகின்றனர்.

ஆனால், ஆதார் அட்டை புதுப்பித்தல், திருத்தம், புதிய ஆதார் எடுத்தல் போன்ற பணிகளுக்காக, அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையங்களில் மட்டும் பணிகள் நடப்பதால், தற்போது கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக விழுப்புரம் கலெக்டர் அலுவலக கீழ் தளத்தில் உள்ள ஆதார் பதிவு மையத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பணிகள் நடக்கிறது.

இங்கு தினசரி ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் குவிவதால், ஆதார் மையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை 9:00 மணி முதல் ஏராளமான மாணவ, மாணவிகள் சீருடையுடன் தங்களது பெற்றோருடன் வந்து, ஆதார் பதிவுக்காகவும், புதுப்பித்தல் பணிக்காகவும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அவர்களில் 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தம், கைரேகை, கண் விழி பதிவு போன்ற பணிகளை பணியாளர்கள் செய்தனர்.

இதே போல், தினசரி ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கும், அருகே உள்ள தாலுகா அலுவலகத்திற்கும் வந்து நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

இது குறித்து, ஊழியர்களிடம் கேட்டபோது, விழுப்புரத்தில் தலைமை தபால் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளிலும் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகிறது. ஆனால், அங்கு சிலருக்கு மட்டும் ஆதார் பதிவு எடுக்கும் ஊழியர்கள், பலரை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.

கூட்டத்தை காரணம் காட்டி, அவர்கள் அனுப்பி விடுவதால் இங்கே அதிகளவில் கூட்டம் சேர்கிறது. இதனால் டோக்கன் வழங்கி புதுப்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

விழுப்புரம் தாலுகா அலுவலகம், தலைமை தபால் நிலையம், கே.கே.ரோடு, நேருஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள சில வங்கி கிளைகளில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகிறது.

இதில், சில வங்கிகளில் பொதுமக்களையும், மாணவர்களையும் அலைக் கழிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் வங்கிகளுக்குச் செல்வதில்லை. இதன் காரணமாக வங்கிகளில் உள்ள மையங்கள் மூடிக்கிடக்கிறது.

தற்போது, மாணவர் சேர்க்கை மாதம் என்பதால் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, ஆதார் சேவை பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us