ADDED : ஜூலை 17, 2024 12:08 AM

நகரில் குற்ற செயல்களை தடுக்கவும், சந்தேகப்படும் வகையில் இருக்கும் நபர்கள், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபவர்களை கண்காணிக்கவும் அனைத்து ஊர்களிலும், முக்கியமான சந்திப்புகளில் சிசிடிவி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று நகரின் எல்லை பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையங்கள் உள்ளன.
இவற்றில் 24 மணி நேரமும் போலீசார் இருந்து கண்காணிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நகரின் முக்கிய சந்திப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அந்தந்த ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தே துல்லியமாக வாகனங்கள், சந்தேகப்படும் நபர்கள் கண்டுபிடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் மாவட்டத்தில் குற்றச்செயல்கள், செயின் பறிப்பு சம்பவங்கள், டூவீலர்கள் திருட்டு உட்பட, தொடர்கதையாக நடந்து வருகிறது. அருப்புக்கோட்டை பகுதிகளில் ஒரு வாரத்தில் மட்டும் காந்தி நகர் பைபாஸ் ரோட்டில் டூ வீலர்களில் சென்றவர்களை வழிமறித்து 3 டூ வீலர்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இன்னும் சிலரிடம் பணத்தை பறித்துள்ளனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வீட்டுக்கு முன் அமர்ந்திருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு, புறநகர் பகுதியில் வீட்டிற்கு முன் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த தம்பதியிடம் அலைபேசி பறிப்பு, வாகன திருட்டுகள் உட்பட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இத்தனை வசதிகள் இருந்தும் போலீசாரால் திருட்டுச் சம்பவங்களை கண்டுபிடிக்கவில்லை. இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவது இல்லை. நகரின் 5 இடங்களுக்கு மேல் உள்ள போலீஸ் அவுட் போஸ்ட்டுகள் செயல்படாமலேயே உள்ளது.
முக்கிய சந்திப்புகளில் ஒரு சில சிசிடிவி., கேமராக்களைத் தவிர மற்றவை காட்சி பொருளாவே இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகர் மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் தொடர்ந்து இருப்பர். போலீசார் பற்றாக்குறையால் காலப்போக்கில் ரோந்து பணி குறைந்துவிட்டது.
காந்தி நகர் ரோட்டில் இளைஞர்கள் அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டி சாகசம் செய்கின்றனர். ஒரே பைக்கில் 3, 4 பேர்கள் அமர்ந்து வேகமாக சென்று பொது மக்களை பீதியில் ஆழ்த்துகின்றனர். இவற்றை கண்காணிக்க இந்த பகுதியில் போதுமான போலீசார் இல்லை.
மாவட்ட நிர்வாகம் நகரில் ரோந்து பணிக்கு தேவையான போலீசார்களை பணியில் அமர்த்தவும், காட்சி பொருளாக உள்ள அவுட் போஸ்ட்டுகள், சிசிடிவி., கேமராக்களை செயல்பட வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.