ADDED : ஜூன் 29, 2025 02:32 AM
சிவகாசி:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து விவசாய பொருள் என்ற பெயரில்  விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ சல்பரை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரிடம் விசாரிக்கின்றனர்.
சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் ஸ்ரீராம் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் நின்றிருந்த லாரியை  கிழக்கு போலீசார் சோதனையிட்டதில் 80 மூடைகள் இருந்தன. லாரியை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த மணிகண்டனிடம் 40,  ரசீதை வாங்கி சரி பார்க்கையில் அதில் எர்ணாகுளத்தில் உள்ள சல்பா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து  அக்ரி டெஸ்டிங் பவுடர் என விவசாயத்திற்கு பயன்படும் பொருளை கொண்டு வந்ததாக  எழுதப்பட்டிருந்தது.
போலீசார் மூடைகளை சோதனை செய்தபோது அதில் பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சல்பர் இருந்தது தெரியவந்தது.  400 கிலோ சல்பரை பறிமுதல் செய்தனர்.  பில்லில் கூடுதலாக கொண்டுவரப்பட்ட 80 மூடை சல்பரை எங்கே இறக்கி வைத்துள்ளனர் என விசாரிக்கின்றனர். மேலும் ஸ்ரீராம் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இளங்குமரன் 52,  கோமதி சங்கர் 50, டிரைவர் மணிகண்டனிடம்   விசாரிக்கின்றனர்.


