ADDED : செப் 24, 2025 08:36 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே., பள்ளி ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பள்ளி ரோடு பகுதியில் 5 க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரி உள்ளன. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை பள்ளி விடும் நேரங்களில் அதிகமான மாணவர்கள், டூ வீலர்கள், சைக்கிள்கள், பள்ளி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதாலும் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகிறது. பள்ளியிலிருந்து மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் இடைஞ்சல் ஏற்படுகிறது. இதில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் வந்து செல்லுகிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் வந்து செல்ல அனுமதிக்க கூடாது என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.