அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு
அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு
அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு
ADDED : ஜூன் 23, 2024 06:32 AM
சென்னை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு சம்பவம் தொடர்பாக, நேற்று அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், நேற்று முன்தினம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்; சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டதால், சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். சபாநாயகர் திருக்குறள் வாசித்து முடித்து, கேள்வி நேரத்தை துவக்கினார். அப்போது, பழனிசாமி எழுந்து பேச அனுமதி கோரினார். அ.தி.மு.க.,வினர் எழுந்து நின்று, அவருக்கு வாய்ப்பு அளிக்கும்படி கோரினர்.
அப்போது, சபாநாயகர் அப்பாவு, அவர்களை அமரும்படி கூறினார். அதை ஏற்று அனைவரும் அமர்ந்தனர். மீண்டும் சபாநாயகர் பேசத் துவங்கியதும், அ.தி.மு.க.,வினர் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பினர்.
உடனே சபாநாயகர் கூறியதாவது:
சட்டசபைக்கு என விதி, மரபு உள்ளது. சட்டசபை மரபுப்படி, திருக்குறள் வாசித்து, வினாக்கள், விடைகள் நேரத்தை துவக்குவோம். இது, மக்களுக்கான நேரம். இது முடிந்த பின், எந்த பிரச்னையாக இருந்தாலும், நீங்கள் பேச அனுமதி தருகிறேன். நீங்கள் தாராளமாக பேசலாம்.
நீங்கள் நான்காண்டு முதல்வராக இருந்துள்ளீர்கள். உங்களுக்கு சபை விதிகள் தெரியும். சபையை ஒத்திவைக்க முடியாது. கேள்வி நேரம் மக்களுக்கானது. முக்கியமான பிரச்னையை நேரமில்லா நேரத்தில் எழுப்பலாம்.
வினாக்கள், விடைகள் நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றால், நீங்கள் தீர்மானம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு நெருக்கடி உள்ளது. அதை சட்டசபையில் காட்டக் கூடாது. சட்டசபை மக்களுக்கு பணியாற்றக் கூடியது. உங்கள் பிரச்னையை தீர்க்க முடியாது. உங்கள் நெருக்கடியை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள் அனைவரும், பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.