நடிகர் தனுஷ் தந்தை மீதான வழக்கு ரத்து
நடிகர் தனுஷ் தந்தை மீதான வழக்கு ரத்து
நடிகர் தனுஷ் தந்தை மீதான வழக்கு ரத்து
ADDED : மார் 12, 2025 03:34 AM
சென்னை: நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்துாரிராஜாவுக்கு எதிராக, பைனான்சியர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகன்சந்த் போத்ரா; பைனான்சியர். இவரிடம், திரைப்பட இயக்குநர் கஸ்துாரி ராஜா, 2012ல், 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
இதற்காக அளித்த காசோலைகள், வங்கியில் பணமின்றி திரும்பியதால், கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக, முகன்சந்த் போத்ரா, காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், 2015ல் வழக்கிலிருந்து கஸ்துாரி ராஜாவை விடுதலை செய்தது.
இதை எதிர்த்து, முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கடன் பெறும் போது அளித்த வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தியதாக, முகன்சந்த் போத்ராவுக்கு எதிராக, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், கஸ்துாரி ராஜா தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.
அதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்து, மன உளைச்சல் ஏற்படுத்தியதாக, கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக, முகன்சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் கஸ்துாரி ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ககன் போத்ரா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.