10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3,000 பேர் மதிப்பெண் மாற்றம்
10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3,000 பேர் மதிப்பெண் மாற்றம்
10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3,000 பேர் மதிப்பெண் மாற்றம்
ADDED : ஜூன் 28, 2024 02:22 AM
சென்னை: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு திட்டம் அறிமுகமான முதல் ஆண்டிலேயே, 3,000 பேருக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடும்; 10ம் வகுப்புக்கு மறுகூட்டல் வசதி மட்டும் நடைமுறையில் இருந்தது.
அதேநேரம், 10ம் வகுப்புக்கும் மறுமதிப்பீடு முறை வேண்டும் என்ற, மாணவர்களின் கோரிக்கை, நம் நாளிதழில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல் மட்டுமின்றி, மறுமதிப்பீடும் அறிமுகமானது.
அதனால், திருத்திய விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண் குறைவாக இருப்பதாக மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.
இந்த திட்டம் அறிமுகமான நிலையில், 5,000க்கும் மேற்பட்ட, 10ம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முடிவுகள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின.
விடைத்தாள்களை மறுதிருத்தம் செய்ததில், 3,022 மாணவ, மாணவியருக்கு, விடைகளில் மாற்றம் உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடு முறை அறிமுகமான முதல் ஆண்டிலேயே, இவ்வளவு அதிகமான மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,959 பேருக்கும், பிளஸ் 1ல், 491 பேருக்கும் மதிப்பெண் மாறியது குறிப்பிடத்தக்கது.